பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

முருகுசுந்தரம்




அச்சத்தால் அதட்டுபவர், பிறையைப் போல
அரிவாளைக் காட்டுபவர், நொடியில் உம்மை
நிச்சயமாய் அழித்திடுவோம் என்று சொல்லி
நெருப்புமழை பொழியும்பத் திரிகைக் காரர்
எச்சரிக்கை என்று சொல்லி மேடை யேறி
எக்காள மிட்டவர்கள், கொக்க ரித்துக்
கச்சைகட்டிக் கதைகட்டி, அழிக்க வேகங்
கணங்கட்டிக் காத்திருந்த ஆட்சியாளர்,


கனிதடுக்கிப் பால்தடுக்கிச் சிவனே என்று
கன்னியின்மேல் விழுஞ்சந்நி தானத் தார்கள்
பணபலத்தைப் படைபலமாய் வைத்துக் கொண்டு
படைநடத்தும் பணக்காரர். இவர்க ளெல்லாம்
துணிவோடு தொகையாக எதிர்த்த நாளில்
தூங்காமல் நம்மண்ணா எழுது கோலால்
அணிவகுப்பே நடத்திவந்தார்; பகைக்கூட் டங்கள்
அத்தனையும் பொடியாக்கிப் போட்டு வந்தார்.


அறமிருக்கும்; அன்பிருக்கும், அச்சப் பேயின்
அடிமரத்தை வெட்டுகின்ற கரமி ருக்கும்;
தரமிருக்கும்; படமெடுத்த பாம்புக் கோணல்
தனைக்காட்டும் கூன்முதுகை நிமிர்த்து கின்ற
திறமிருக்கும்; திருநாட்டுத் தமிழர் மானம்
திருப்புதற்குக் குட்டுவன்போல் குறைவில் லாத
மறமிருக்கும்; பரலோகஞ் செல்லு தற்கு
மார்க்கந்தான் இவரெழுத்தில் இருப்ப தில்லை.