பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

45




அங்கங்கள் பொடியாகப் பாடு பட்ட
ஆனந்தன் நாடகத்தை எழுதி டாமல்
சங்கரனும் சங்கரியும் காத லித்த
சல்லாப நாடகங்கள் தந்தி ருந்தால்
கங்குபட்ட ராயிருப்பார்; இவருங் கூடக்
கனபாடி யாயிருப்பார்; ஏழை மக்கள்
அங்கந்தான் அமைச்சனென்ற நினைப்பி னாலே
ஆனந்த னாயென்றும் வாழ்ந்து வந்தார்.


"கோழிகளை வளர்ப்பதற்கும், மரத்தில் தாவும்
குரங்குகளை வளர்ப்பதற்கும் திட்டந் தந்தீர்;
மாந்தர்களை வளர்ப்பதற்குத் திட்ட முண்டா?
மரம்வைத்தவன் தண்ணீர் வார்ப்பான் என்றீர்!
ஆலைகளை வானொலியை இராமன் போன்ற
அவதார புருஷர்களா கண்ட றிந்தார்?
ஏனிந்தக் கடவுளர்கள்? மனித னாக
இருப்பதுமேல்" என்றண்ணா எழுதி வந்தார்.


"பழம்அழுகும்; மலர்கசங்கித் தீநாற் றத்தைப்
பரப்பிவிடும், பட்டைப்போல் பளப ளக்கும்
தழைசருகாய் மாறிவிடும்; பயனில் லாத
தத்துவங்கள் அவற்றைப்போல் அழிதல் திண்ணம்.
நுழைகின்ற நூலகத்தில் அட்லாஸ் வேண்டும்;
நுமைக்குருட ராக்கும்பஞ் சாங்கம் வேண்டாம்"-
எழுதியுள்ளார் நம்மண்ணா! தமிழகத்தில்
எவர்சொன்னார் இவரைப்போல் இனிப்புச் சொல்லால்?