பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

முருகுசுந்தரம்




உன்முழக்கம் சிங்கத்திற் கிலையே: அன்பின்
ஊற்றொழுக்கம் மேகத்திற் கிலையே; உன்றன்
புன்னகையின் குளிர்ச்சியினைக் கோடைக் கானல்
புதுமலரும் காட்டாதே! தொடுக்கும் கேள்வி
மின்னலுக்கு நீகொடுக்கும் விடையின் வேகம்
மிடுக்கெல்லாம் எதிர்த்துவரும் பந்துக் குண்டா?
தின்னவரும் புலிகளையும் மன்னிக் கின்ற
திறமுன்போல் நமைத்தாங்கும் மண்ணுக் கேது?


கொடியெடுத்த பெருங்கோட்டைக்
கொற்றத்தேர் மன்னா!
குற்றால அருவியைப்போல்
கொஞ்சுதமிழ் அண்ணா!
அடியெடுத்து வைத்தேறும்
அரங்கத்தி லெல்லாம்
அரசாட்சி செய்யாமல்
அடங்கியதோ உன் நா!


முடியெடுத்து வைத்தோமே:
முரசெழுப்பு முன்னே
முடியாதென் றெமைத்தடுத்து
மூடியதுன் கண்ணே!
அடிதொடர்ந்து நின்வழியில்
ஆட்சியினைச் செய்வோம்;
அழகுதமிழ்ப் பாட்டிலுன்றன்
பெருமைகளைப் பெய்வோம்!


அண்ணா இரங்கற் கவியரங்கம் சேலம்.