பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. சந்திரமோகன்

(சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்)

(இருண்ட நிலையில் குரல் ஒலி)

'பாரத் வர்ஷம், பரத கண்டம்,புண்யபூமி' என்று புகழ்ந்தனர் புராணிகர்கள், புலவர்கள் சகலரும். எனினும் புண்ணிய பூமி அடிமைப்படுத்தப்பட்டது. எங்கும் காரிருள் சூழ்ந்து கொண்டது. எங்கும் திகைப்பு! கலக்கம். ஆனால்.. காரிருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பிற்று சுதந்திர ஜோதி. மராட்டியத்திலே ஏற்றி வைக்கப்பட்ட விடுதலை விளக்கு புதியதோர் எழுச்சியை உண்டாக்கிற்று. மாவீரன் சிவாஜி கிளம்பினான், சீறிப் போரிட, சிதறி ஓடினர் எதிரிகள். விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் சமூகம் ஜாதி பேதமெனும் சனியனுக்கு ஆளாகி அவதிப்பட்டது. வீரர்கள் விடுதலைப் போரை நடத்தினர். வீணர்கள் ஜாதியையும் மதத்தையும் காட்டிக் கொழுத்தனர். சமூகக் கொடுமை மராட்டியத்தை விட்டு ஒழியவில்லை. அந்த நிலையிலே...

காட்சி - 1

இடம் : குளக்கரை

உறுப்பினர்கள் : (கேசவப்பட்டர், பாலசந்திரப் பட்டர், பச்சை.)

(பட்டர்கள் இருவரும் தடிகளைத் தூக்கிக் கொண்டு ஒடி வருகிறார்கள். பச்சை அடிபட்டு ஒடிவருகிறான்.)

கேசவப்பட்டர் : அடடே! எவ்வளவு திமிருடா உனக்கு. அடி, உதை, எவ்வளவு மண்டைக் கர்வம் இவனுக்கு?

பாலச்சந்தர் : வெட்டு, குத்து.