பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அறிஞர் அண்ணா


(பச்சை ஒடி வந்த வேகத்தில் கீழே விழுகிறான். அவனைத் தடியால் தாக்குகிறார்கள். அவன் எழுந்து கும்பிட்டபடி)

பச்சை : ஐயோ! சாமி, சாமி! ! கும்பிடுறேன்; அடிக்காதிங்க. தெரியாத்தனமா செய்துட்டேன். இந்தத் தடவை விட்டுடுங்க.

கேசவப்பட்டர்: (அடித்துக் கொண்டே) திருக்குளத்தில் போயா குளிப்பது? எவ்வளவு திமிருடா உனக்கு சண்டாளா! பஞ்சமப் பயலுக்கு ஆகுமோ இந்தப் பதட்டம்? பாவி புண்ணிய தீர்த்தத்தையே பாழாக்கிவிட்டாயே.

பச்சை : (உடம்பைத் துடைத்துக் கொண்டு) இல்லிங்க; இனிமே செய்யலிங்க; உயிர் போகுதுங்களே... ஐயையோ!

பாலசந்தர் : பிடித்துக் கட்டி சவுக்கால அடிக்கணும்! நீச்சப்பயல். அடுக்குமாடா நீ செய்த அக்ரமம்? அடே, மதத்துரோகி! எந்தக் காலத்திலேயாவது நடந்தது உண்டா இந்த மாதிரி அக்ரமம்? உன் தோலை உறிச்சுப் புடுறேன் பார்.

பச்சை : வேணாங்க. வேணாங்க! இந்தப் பக்கமே வரமாட்டேன்.

கேசவப்பட்டர்: (மிரட்டும் குரலில்) வந்தா?

பச்சை : (பயந்து) தோலை உறிச்சுடுங்க.

கேசவப்பட்டர் : நடிப்போ? நீச்சப்பயலே, இனி இந்தப் பக்கம் தலை காட்டவே கூடாது. தெரிஞ்சுதா.

(பச்சை ஓடிவிடுகிறான். கேசவப்பட்டர் தனிமையில்)

பயல்களுக்கு எவ்வளவு கர்வம். லோகம் என்ன ஆவது, இப்படி, இதுகள் நடக்க ஆரம்பித்தால்?

காட்சி 2

இடம் : வீதி

உறுப்பினர்கள் : (பச்சை,பிச்சை, ஆண்டி, சாது)

(அடிபட்ட பிச்சை காயங்களைப் பார்த்துக் கண்ணீர் விடுகிறான்.)