பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

11


பச்சை : ஆண்டவனே! வயலிலே வேலை செய்ததாலே உடலிலே அழுக்கு. அதைக் கழுவக் குளத்திலே இறங்கினேன். குளித்தது பாவமாமே! பாவிப்பயல்க படுகொலை செய்துட்டானுங்க. குளிக்கப் போனவன் சேத்தப் பூசிக்கிட்ட கதை மாதிரின்னு ஊரிலே உலகத்திலே சொல்லுவாங்க. என் கதி குளிக்கப் போயி ரத்தாபிஷேகமாச்சு. தெய்வமே? உனக்குக் கண்ணில்லையா. இந்த தேசத்திலே பிறந்தவன், இதிலேயே உழைக்கிறவன், இங்கேயே இருக்கிறக் குளத்திலே நான் குளிக்கக் கூடாதாம். எங்கப்பன் சொல்லுவார் முன்பெல்லாம் இந்தக் குளத்தை எங்கப் பாட்டன் வெட்டினானாம். இதுலே குளிச்சா புண்ணியமாம்! இதோ, வழியுது புண்ணியம்.

(ரத்தக் கறையைத் துடைத்துக் கொள்கிறான். பச்சையின் கூக்குரல் கேட்டு ஆண்டி ஒடி வந்து...)

ஆண்டி : பச்சை நீயா 'ஐயோ, ஐயோ'ன்னு கூவினது. என்னடப்பா நடந்தது. உடம்பெல்லாம் காயம், ரத்தம்! என்ன அநியாயமிது.

பச்சை : ஆண்டி பார்த்தாயா இந்தக் கோரத்தை கேட்டியா இந்த அக்ரமத்தை? நீ என்னமோ நம்ம சாதியிலே யாரும் படிக்காத படிப்பு படிச்சவேண்ணு ஊரு, நாடெல்லாம் உன்னைப் புகழுதே. இந்த அக்ரமத்தைக் கேட்க வேண்டாமா நீ?

ஆண்டி: பச்சை! என்ன நடந்தது? முரட்டு மாடு ஏதாவது இடித்துக் காயப்படுத்தினதா? வெறிநாய் மேலே விழுந்து கடித்ததா? கொள்ளைக்காரப் பசங்க தடியாலே தாக்கினாங்களா? அழாமெ சொல்லு பச்சை.

பச்சை: ஆமாம்! முரட்டு மாடுதான் மேலே விழுந்து முட்டுச்சி. வெறி நாய்தான் கடித்தது. கொள்ளைக்காரனுங்கதான் என்னைத் தடியாலே தாக்கினாங்க.