பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

13


பச்சை : அநீதியோ, அக்ரமமோ! இது இன்று நேற்று ஏற்பட்டதா? நம்ம பாட்டன் முப்பாட்டன் காலத்திலே இருந்து நடக்குது. நாம் என்ன செய்யலாம்.

ஆண்டி : என்ன செய்யலாம். இந்தக் கொடுமையாவது தொலைய வேண்டும். அல்லது நாமாவது ஒழிய வேண்டும்.

பச்சை : பதறாதே ஆண்டி. நாம பாவம் செய்தவங்க. அதனாலேதான் இந்தப் பாழான ஈனக் குலத்திலே பிறந்தோம்.

ஆண்டி: மடையன்! ஈன சாதி என்று எவனோ சொன்னால் அதை நம்பி நாசமாகிறாயே. நாம் எந்த விதத்திலே தாழ்வு? உழைக்கவில்லையா? நாம் மனிதரில்லையா? ஊரை ஏய்த்தா பிழைக்கிறோம்?

பச்சை : ஆண்டி! நீ நம்ம சாதியிலே படிச்சவன். என்னென்னமோ பேசறே. நீ சொல்றதை கேட்கிறபோது எனக்கென்னவோ தலை சுற்றுவது போல் இருக்கு.

ஆண்டி: உன்னைப் போன்ற ஜென்மங்கள் நம் சமூகத்தில் இருப்பதால் தான் இந்த இழிவு! பச்சே! பாழான சமூகக் கொடுமையை நான் இப்போது பார்த்தது மட்டுமல்ல அனுபவித்துமிருக்கிறேன்.

(சட்டையைக் கிழித்துப் பழைய தழும்புகளைக் காட்டி)

பார், தழும்புகளை! அந்தப்பாவிகள் செய்த அக்ரமம். என் பத்தாம் வயதிலே நேரிட்டது. இந்தத் தழும்பும் என் உடலை விட்டுப் போகாது. இந்த மமதையை அழிக்க வேண்டும் என்ற உறுதியும் என் உள்ளத்தை விட்டுப் போகாது. நம்மைப் படுத்துகிற பாடு இருக்கிறதே. இதற்கெல்லாம் ஒருநாள் அவர்கள் பதில் சொல்லித் தீர வேண்டும்... வா... போகலாம்.