பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அறிஞர் அண்ணா


வீழ்கிறது. சமரசம் பிறந்துவிட்டது. சண்டாளன், சர்மா என்னும் பேதம் இனி இராது. அனைவரும் சமம்! அனைவரும் சமம்.

ஆண்டி : அழகான ஆரூடம். ஆனால் அது பலிக்காது. இன்பக் கனவு காண்கிறீர் ஐயா! தங்களுடைய உபதேசத்தையும் ஒரு நூலாக்கி வைத்துக் கொள்வார்கள். ஏட்டுச்சுரை, காதுக்கு இனிப்பு, வாய்க்குப் பயனில்லை.

சாது : தம்பி! விதை தூவி வருகிறோம். விளையும் பயிர் முளையிலே என்பது போல, இப்போதே சமரச மணம் வீச ஆரம்பித்து விட்டது. நிச்சயம் மாறுதல் ஏற்படும் என்மொழி கேள். பொறுமை கொள்.

ஆண்டி : பொறுமை? ஐயா! பொல்லாங்கு ஏதும் செய்யாது, பிறருக்காக உழைத்துவிட்டு, உருமாறி, உள்ளங்குமுறி ஒண்டக் குடிசையின்றி, ஒட்டாண்டியாகி ஒலமிட்டுக் கிடக்கிறோம். இன்று நேற்று முதல் அல்ல; பல தலைமுறைகளாகக் கொடுமைகளைச் சகித்தோம்; வறுமையால் வாடினோம். வஞ்சகரால் வீழ்ந்தோம். வாழ்வே பெரும் சுமை எங்களுக்கு? இம்சிக்கப்படும் நாங்கள், இழிவாக நடத்தப்படும் நாங்கள், ஊரிலே உரிமையோடு உலவ அனுமதிக்கப்படாத நாங்கள், மனித உரிமையும் தரப்படாது, குளத்திலே குளிக்கவும் உரிமையும் பெற முடியாத நாங்கள், பொறுமையாய் இருக்க வேண்டும்! பொறுத்துக் கொள்ள வேண்டும்! காலின் கீழ் நசுக்கப்படும் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். காலில் வெள்ளெலும்பு முளைத்த நாளாய் அடிமைக்காரனாக இருந்து பாடுபட்டுக் கிடக்கும் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அற்புதமான யோசனை, பாம்பின் வாயிலே சிக்சிய தேரைக்கும், புலியின் பிடியிலே சிக்கிய மானுக்கும், போய்ச் செய்யும் இந்தப் போதனையை பொறுமையாம் பொறுமை. பொறுத்ததெல்லாம் போதாதா? இவ்வளவு தாம் உம்மால்