பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

19


எண்ணி விடாதே. ஆபத்து என்ற உடனே இந்தக் கண்கள் நெருப்பைக் கக்கும். உன் மலர்க் கரத்தையும் மதுரம் தரும் அதரத்தையும் தொட்டு விளையாடும் இந்தக் கரத்திலே வாள் ஏந்தியதும், எதிரியின் தலை என் தாளிலே விழும் வரை புயலெனத்தான் சுற்றித் திரிவேன் களத்தில்.

இந்து : போதும், போர்க்களச் செய்திகள். இனிமேல் இந்த மாளிகையிலே ஆடிப்பாடி விளையாட வேண்டும் நாம். மராட்டிய சாம்ராஜ்யத்தை கிருஷ்டிக்கும் மாவீரன் என் காதலர் என்று ஊரெல்லாம் புகழ்கிறது.

மோகன் : ஊரெல்லாம் புகழ்ந்தாலும், உலகமே புகழ்ந்தாலும், உன் அப்பா மட்டும்...

இந்து : அவர் மட்டும் என்ன? உங்கள் வீரதீரத்தைப் பழிக்கிறாரா? உங்கள் மீதுள்ள அளவு கடந்த அன்பினால் போருக்குப் போக வேண்டாம் - ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறுகிறார்.

மோகன் : வேடிக்கையான சுபாவம் உன் அப்பாவுக்கு! வாள் ஏந்தும் கடமையை என் போன்ற வாலிபர்கள் மறந்தால் அனைவரும் சேர்ந்து எதிரியின் தாள் ஏந்த வேண்டுமே! தாயகம் அடிமையாகிவிடுமே! நாடு பரிபூரணவிடுதலை பெற்று நமது ஆட்சி நிலைநாட்டப்படும் வரையில் போரிட்டுத்தானே ஆக வேண்டும். மராட்டிய சாம்ராஜ்யம் சிருஷ்டித்தான பிறகுதான் நமது காதல் ராஜ்யம். ஆகா? இன்பமே! நமது காதல் ராஜ்யம் அமைந்து விட்டால்...!

இந்து : அமைந்துவிட்டால்...

மோகன் : புயலும் தென்றலாகும். பொற்கொடியே! அந்த ராஜ்யத்திலே வாளும் வேலும் என்ன செய்ய முடியும்?

இந்து : உங்கள் அன்புமொழியால் என்னைப் பைத்தியமாக்கி விடுகிறீர்கள் கண்ணாளா!