பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அறிஞர் அண்ணா


சாது : ஆர்வம் ததும்புகிறது உன் பேச்சிலே. அனுபவமில்லாததால் ஆர்வம் அளவுக்கு மிஞ்சியிருக்கிறது. அனுபவம் பெறுவாயப்பா. நீ மராட்டியத்தின் மறுமலர்ச்சி துதூவன். போய்வா!

காட்சி - 5

இடம் : நந்தவனம்

உறுப்பினர்கள் : சாந்தாஜி, இந்து, மோகன்

(இந்துமதி மாலை தொடுத்துக் கொண்டிருக்கிறாள். சாந்தாஜி வந்து...)

சாந்தாஜி : இந்து! இன்னும் மாலை முடியவில்லையா?

இந்து : இதோ, முடிந்து விட்டதப்பா.

(மாலையைத் தருகிறாள். சாந்தாஜி மாலையைப் பார்த்துவிட்டு...)

சாந் : என்ன இந்து மாலையில் மலரைவிட தழைதான் அதிகமிருக்கிறது. தேவனுக்கு இப்படியாமா மாலை சூட்டுவது?

இந்து : அப்பா! நீங்கள் தினம் தினம் தேவனை தரிசிக்கிறீர்களே தவிர அவருடைய திவ்யமான குணத்தை தெரிந்து கொள்ளவில்லையே. பக்தியோடு பச்சை ஓலையை மாலையாகச் சமர்ப்பித்தாலும் பகவானுக்கு அதுவே பாரிஜாதமாயிருக்கும்.

சாந் : ஆமாம்! பேசத் தெரிந்து கொண்டாய். என்ன இருந்தாலும், இந்து கோவிலுக்குக் கொண்டு போகிற மாலை இப்படி இருக்கக் கூடாது.

இந்து : ஆமாம்! கோவிலிலேயே இருந்து விடப்போகிறது நீங்கள் தேவனுக்கு என்று மாலையைத் தருகிறீர்கள். நீங்கள் தரும்போதே பட்டாச்சாரி அதைத் தன்னுடைய தேவதாசிக்குத் தர தீர்மானிக்கிறான்.