பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

25


சாந் : துஷ்டப் பெண்ணடி நீ!

இந்து : உம்... அப்பா! மாலையைத் தரும்போது தேவனிடம் சொல்லுங்கள். இது, இந்து தயாரித்தது என்று. ஆமாம்! நீங்கள் சொன்னால் எங்கே அவர் காதில் விழப்போகிறது. அர்ச்சகருடைய அபசுரத்தைக் கேட்டு கேட்டு காது செவிடாகி எவ்வளவோ நாளாகிவிட்டது.

(என்று கூறிவிட்டு ஒடுகிறாள். இன்னொரு மாலை கீழே விழுகிறது.)

சாந் : இந்து! இந்த மாலை ஏது: இவ்வளவு கள்ளியாகிவிட்டாயா? நல்ல மாலையை ஒளித்து வைத்து விட்டு, இலையை மாலையாக்கி இறைவனுக்குத் தருகிறாய்! ஏன் இந்த மாலையை ஒளித்து வைத்தாய்?

(இந்து மெளனமாயிருக்கிறாள்)

பதில் சொல்! யாருக்கு இந்த மாலை? யாருக்காக இந்த மாலை சொல்லு?

(சந்திரமோகன் வருகிறான். இந்து வெட்கத்துடன் தலைகுனிகிறாள். சாந்தாஜி அதைக் கவனியாமல்)

தேவனுக்கு மாலை தயாரிக்க சொன்னால் நீ இப்படி திருட்டுத்தனமா செய்கிறாய்? தேவனுக்குத் தழை! யாருக்கு இந்த மாலை? சொல்லு...

மோகன் : எனக்காக...

(சாந்தாஜி திடுக்கிட்டுத் திரும்பிக் கோபமாக)

சாந் : என்ன! எனக்காக மாலை என்றா சொல்கிறாய்?

(மோகன் பயந்தவன் போல் பாசாங்கு செய்து)

மோகன் : மாலையா? எனக்காக? ஏன்?

சாந் : என்னடா மோகன்! என்னிடமா வேடிக்கை செய்கிறாய். நான் யாருக்கு மாலை என்று இந்துவைக் கேட்டால், நீ எனக்காக என்று சொல்லிவிட்டு...