பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

29


சாந் : என்னமோ, அப்பா! உன் சொல் என் செவி புகாது. இந்துவின் தகப்பன் வீட்டோடு - குடும்பத்தோடு, சுத்தி கட்டாரி தூக்காத கண்யமாக வாழும் ஒரு மருமகனைத் தேடுகிறேன். அவ்வளவுதான் தெரியும் எனக்குப் பேச. நான் செல்வதைக் கேளடா மோகன். சண்டாளத் தொழிலடா இந்தச் சண்டை போடும் தொழில், கொலை வேலை! ரத்தக்கறை படிந்த கையால் இந்த ரதியைத் தொடலாமா? போனது போகட்டும். அவளைத் தொட்டுத் தாலி கட்டிய பிறகாவது நீ இந்தத் தொழிலை விட்டு விடுகிறேன் என்று சத்தியம் செய்.

மோகன் : எந்தத் தொழிலை?

சாந் : பட்டாளத்து வேலையை.

மோகன் : அதுதான் தொழிலா? என் கடமை! மராட்டிய வாலிபன் மராட்டியப் படையிலே சேர்ந்து பணியாற்றுவது, தொழிலல்ல; அவன் பிறப்புரிமை. நாட்டுத் தொண்டு; ராஜ சேவை, தேசபக்தி.

சாந் : அப்படியென்றால் இந்துவிடம் உனக்கிருக்கும் அன்பு வெறும் வேஷம் அவளுக்காக நீ வாளைத் துறந்து விடக் கூடாதா என்ன?

மோகன் : மராட்டிய நாட்டிலே இப்படி ஒரு முதியவர் இருப்பது தெரிந்தால் சிவாஜி ரத்தக் கண்ணீர் சொரிவார்.

சாந் : சொரிவார்! சொரிவார்!! ஜீஜீ பாயின் கண்களிலே ரத்தக் கண்ணீர் சொரிந்ததை அவர் அறியார். என் போன்ற ஏக்கங்கொண்ட கிழவர்களின் கண்ணீரையும் அவர் பார்த்ததில்லை.

மோகன் : நல்ல வேளையாகப் பார்த்ததில்லை. எதிரியின் வாள் உண்டாக்கிய காயத்திலிருந்து ஒழுகும் ரத்தத்தைத் துடைக்கவும் நேரமின்றி போரிட்ட வீரர்களையே அவர் பார்த்தார். இந்துமதியைக் கேளுங்கள், வாளை நான் அவளுக்காகத் துறந்துவிட வேண்டுமா என்று?