பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அறிஞர் அண்ணா


(சாந்தாஜி மகிழ்ச்சியுடன் இந்துமதியைக் கூப்பிட, அவள் வீரன் உடையை அணிந்து வருகிறாள், மோகன் சிரிக்க...)

(கோபத்தோடு)

சாந் : இந்து! இது என்ன கோலம்? போ, உள்ளே.

மோகன் : மராட்டிய மாதாவின் போர்க்கோலம் அது.

சாந் : போதும்! நீயும் போ! இருவரும் சேர்ந்து எனக்குப் பைத்தியம் உண்டாகும்படி செய்து விடுவீர்கள் போலிருக்கிறது... மோகன் போ! நான் கோவிலுக்குப் போகவேண்டும் நாளைக்கு வா! நாளைக்கு வேண்டாம்; நான்கு நாள் பொறுத்து வா! வேண்டாம்; நீ வரவே வேண்டாம். என் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.

இந்து : அப்பா!

சாந் : ஆமாம் யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும்?

மோகன் : சாந்தாஜி! இந்துமதி உமது மகள். நீர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டவள். நான் நாட்டு விடுதலைப் படையில் ஓர் வீரன். நீ வீரத்தைப் பழித்துப் பேசிக் கொண்டிருப்பதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்துமதியின் பேரழகுக்காக நான் பேடியாகி விட வேண்டுமென்று எண்ணாதீர். அவளை எனக்குத் தாரமாக்கினால் என் மாளிகையில் வசிப்பாள். எங்கள் காதலை உணராமல் அவளை வேறு யாருக்கேனும் திருமணம் செய்து கொடுத்தால், இந்து என் மாளிகையில் உலவ முடியாது. அப்போதும் என் மன மாளிகையில் வேறு மங்கை உலவமாட்டாள். நான் வருகிறேன்.

(கோபமாகப் போகிறான்.)