பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அறிஞர் அண்ணா


விருந்து மண்டபத்திலே நடந்த விவாதத்தை நான் சற்று தொலைவிலிருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். விருந்து மண்டபத்திலே விஷப்புகையை மூட்டி விட்டனர். வீரன்தான், ஆனால் குலம் என்று கேட்கின்றனர். நிம்பார்க்கார் குலமாம் கோர்பாத்குலமாம்-சவாந்து குலமாம்! இவைகளெல்லாம் நான் களத்திலே கடும் போரிடக் கிளம்பிய போது எங்கே போயின? குடியானவனுக்கு விடுதலைப் போரை நடத்த அனுமதியிருந்தது! ஒரு குடியானவனுக்கு விடுதலைப் போரை நடத்த அனுமதி இருந்தது. ஆனால் ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க. குல தர்மம் தடைவிதிக்கிறது. இந்த நிலையில் நாடு இருக்கிறது.

சிட்னீஸ் : வீரத் தலைவனே! விசாரத்தை விடுங்கள். அவர்களின் விதண்டா வாதத்தை முறியடிக்க முடியாமலா போகும், மலைகளைத் தூளாக்கிய நம்மால்?

சிவாஜி : வீரம் பேசுகிறாய் சிட்னீஸ்? விஷத்தைக் கக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். பார்த்தாயே? நீதானே பார்த்தாய்?

சிட்னீஸ் : பார்த்தேன்; சிந்தித்தேன்; ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

சிவாஜி : என்ன?

சிட்னீஸ் : மராட்டிய மண்டலம் உருவாகி விட்டது. புதிய ஜீவன் ஏற்பட்டுவிட்டது. எனினும் தாங்கள் மட்டும் இன்னும் பழைய சிவாஜியாகவே இருக்கிறீர்கள். அதனால் தான் பழமையில் படிந்து போயுள்ள அந்த சர்தார்கள், குலதர்மம் பேசுகிறார்கள். அவர்களிடம் கோபித்துப் பயனில்லை. வாதாடியும் பயனில்லை. அவர்கள் புண்ணிய ஏடுகளை பொதி பொதியாகக் கொண்டு வந்து கொட்டுவர், தமது கட்சிக்கு ஆதரவு தேட. ஆகவே அஞ்சாநெஞ்சனே! தாங்கள் மகுடா பிஷேகம் செய்துக் கொண்டு மகாராஜாவாகிவிட வேண்டும்.