பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இரண்டாம் அத்யாயம்.


விசாலாக்ஷிக்கு ஜீ. சுப்பிரமணிய அய்யர் செய்த உதவி.

சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து சரியான மூன்று வருஷங்களாயின. 1904-ஆம் வருஷத்தின் இறுதி நடைபெற்றது. அப்பொழுது சென்னப்பட்டணத்தில் “சுதேசமித்திரன்” பத்திராதிபராகிய ஜீ. சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக்கப்பால் பம்பாயில் நடைபெறப் போகிற “காங்கிரஸ்“ என்ற பாரதஜன சபைக்கொரு பிரதிநிதியாகச் செல்ல வேண்டுமென்ற கருத்துடன் யாத்திரைக்கு வேண்டிய உடுப்புகள், தின்பண்டங்கள் முதலியன தயார் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் ஜீ. சுப்பிரமணிய அய்யர் மஹா கீர்த்திபெற்று விளங்கினார். அவருக்குக் கொடிய ரோக மொன்றினால் உடம்பெல்லாம் முகமெல்லாம் சிதைந்து முள்சிரங்குகள் புறப்பட்டிருந்தன. இருந்தாலும் நிகரற்ற மனோதைரியத்துடன் அவர் தேசப் பொதுக் காரியங்களை நடத்தி வந்தார். மேற்கூறிய 1904-டிஸம்பர் மாஸத்திடையே ஒரு நாட்காலையில் அவர் தம் வீட்டு மேடையின்மேல் தம்முடைய விஸ்தாரமான புத்தகசாலையினருகே ஒரு சாய்நாற்காலியின் மீது சாய்ந்து கொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார்.

அவர் முன்னே ஒரு சஸுமங்கலிப் பெண்—அவருடைய இளைய மகள்— ஒரு பிரமாண்டமான ஊறுகாய்ப் பரணியைக் கொண்டுவைத்தாள்.