பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௬

சந்திரிகை

ஒட்டிக் கொண்டு வா” என்றார். அவள் அதை ஒட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள். கொடுத்துவிட்டு, மகள் மறுபடி பேனாவையும், மைக்கூட்டையும் மையத்தும் தாளையும் கொண்டு மேஜையில் வைத்துவிட்டுக் கீழே சென்றுவிட்டாள். ஜீ. சுப்பிரமணிய அய்யர் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே விசாலாக்ஷியை நோக்கி:— ”உனக்குத் தெலுங்கு தெரியுமா?” என்று கேட்டார். ”தெரியும்” என்றாள் விசாலாக்ஷி. ”எங்கே படித்தாய்?” என்று அய்யர் கேட்டார்.

”எங்களூரில் நானிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தெலுங்குப் பிராமணரொருவர் இருந்தார். நான் சிறு குழந்தைப் பிராய முதலாகவே அந்தக் குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாக பழகிக் கொண்டு வந்தபடியால் எனக்குத் தெலுங்கு பாஷை தெலுங்கர்களைப் போலவே பேசவரும்” என்றாள்.

”சரி, உனக்குக் கூடிய சீக்கிரத்தில் நல்ல மணமகனுடன் விவாகம் நடைபெறும். ”நீங்கள் தம்பதிகளிருவரும் நெடுங்காலம் இன்புற்று வாழக்கடவீர்” என்று சொல்லி, அய்யர் அவளிடம் காகிதத்தைக் கொடுத்தார். அவள் அக்கடித்தை வாங்கி கண்ணிலே ஒற்றிக்கொண்டு மடியில் வைத்துக் கட்டிக் கொண்டாள். பிறகு ஜீ. சுப்பிரமணிய அய்யரை நோக்கி ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றனள். அக்குழந்தையும் ஜீ. சுப்பிரமணிய அய்யரை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே போயிற்று.