௨௬
சந்திரிகை
அழகோ வர்ணிக்குந் தரமன்று. தெய்விக ரூபம்; வனப்பின் இலக்கியம்.
சோலைப் பறவைகளெல்லாம் இக் குழந்தையின் அழகைக் கண்டு மயங்கிக் களிகொண்டு இதன் தலையைச் சுற்றிச் சுற்றி வட்டமிடலாயின. பலவிதக் குருவிகளும், குயில்களும், கிளிகளும், நாகணவாய்களும் தங்களுக்குத் தெரிந்த நாதங்களில் மிகவும் அழகிய நாதங்களைப் பொறுக்கியெடுத்து, இக்குழந்தையின் முன்னே வந்து நின்றொலித்தன. வானரங்கள் தமக்குத் தெரிந்த பாய்ச்சல்களிலும் நாட்டியங்களிலும் மிகவும் வியக்கத்தக்கனவற்றை இக்குழந்தைகளுக்குக் காண்பித்தன.
புன்னகை செய்த மலர்ச் சிறு வாயைச் சந்திரிகை மூடவேயில்லை. வானமும், ஸூர்யனும், ஒளியும், மேகங்களும், மரங்களும், செடிகளும், கொடிகளும், மலர்களும், ஸுந்தரப் பக்ஷிகளும் கூடிக் காலை நேரத்தில் விளைவித்த அற்புதக் காட்சியிலும், பறவைகளின் ஒலிகளிலும் சந்திரிகை சொக்கிப் போய்விட்டாள்.
ஒரு சமயம் அவள் தன்னை மறந்து எழுந்து வானத்தை நோக்கி நின்று இரண்டு கைகளையும் கொட்டிக்கொண்டு கூத்தாடுவாள். ஒரு சமயம் பட்சிகளின் ஒலிகளை அனுசரித்துத் தானும் கூவுவாள்.
இங்ஙனமிருக்கையில், வேலைக்காரி குழந்தையை நோக்கி:— “நீ ஒரு பாட்டுப்பாடு” என்றாள். ”அத்தை கற்றுக் கொடுத்த 'நந்தலால்' பாட்டுப் பாடலாமா?” என்று சந்திரிகை கேட்டாள்.