வீரசேலிங்கம் பந்துலு
௨௯
வீரேசலிங்கம் பந்துலு ஒரு வெற்றிலைத் தட்டு நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாஸனைத் திரவியங்களுடன் கொண்டு வைத்தார். அது முழுதையும் அய்யங்கார் மென்று மென்று முக்கால்மணி நேரத்தில் ஹதம் பண்ணிவிட்டார்.
அப்பால் பந்துலு அவரிடம் ஒரு தெலுங்கு பத்திரிகையை நீட்டினார். அவர் அதை ஆதிமுதல் அந்தம் வரை—விளம்பரங்களுட்பட—ஒரு வரிகூட மிச்சமில்லாமல் வாசித்து முடித்தார். கோபாலய்யங்கார் இங்கிலீஷ், ஸம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு நான்கு பாஷைகளிலும் உயர்ந்த பயிற்சியுடையவர். இவர் தெலுங்கு ஜில்லாக்களில் சில வருஷங்களில் வேலை பார்த்த ஸமயத்தில் தெலுங்கு பாஷையைத் தன் தாய் மொழிக்கு நிகராகப் பயின்று கொண்டார்.
இவர் பத்திரிகை வாசித்து முடித்தபின், இருவரும் வீட்டுக் கொல்லையிலே போய்ச் சிறிது நேரம் உலாவிக் கொண்டிருந்தனர்; பிறகு ஸ்நானம் பண்ணினார்கள்; போஜனம் பண்ண உட்கார்ந்தார்கள்.
தேவலோகத்து விருந்து போன்ற சமையல் பக்குவம். வீரேசலிங்கம் பந்துலுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. இத்தனை ருசியான உணவை அவர் தம்முடைய ஜன்மத்தில் உண்டதில்லை. கனவில் கண்டதில்லை. கற்பனையில் எட்டினதில்லை. தின்னத் தின்னத் தின்ன ருசி தெவிட்டவேயில்லை. கோபாலய்யங்காருடைய முகத்தைப் பந்துலு ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பந்துலுவின் முகத்தை அய்யங்கார் ஒரு முறை திரும்பிப் பார்த்தார்.