பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩ ௬

சந்திரிகை

பெண்ணுடைய ஸம்மதத்தை விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். அவள் ஸம்மதமுணர்த்துவாளாயின், பிறகு விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யலாம்” என்று பந்துலு சொன்னார். இதைக் கேட்டு கோபாலய்யங்கார்:— “அப்படியானால் இன்றைக்கும் நாளைக்கும் நான் இங்கேயே தங்களுடைய விருந்தாளியாக இருந்து விடுகிறேன். எனக்கு வேறெங்கும் எவ்விதமான காரியமுமில்லை“ என்றார்.

“அப்படியே செய்யுங்கள்“ என்றார் பந்துலு.

பிறகு வீரேசலிங்கம் பந்துலு தம்முடைய பேனா மைக்கூடு முதலிய கருவிகளை எடுத்து ஏதோ எழுத்து வேலை செய்யத் தொடங்கினார்.

கோபலய்யங்கார் சாய்வு நாற்காலியில் சாய்ந்த, படியே நித்திரை போய்விட்டார்.

கோபலய்யங்கார் தூங்கிக் கொண்டிருக்கையில் சமையலறைக்குள் மாதரிருவரும் இராத்திரி போஜனத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். மிக விஸ்தாரமான சமையல்; அறுசுவைகளும் வியப்புறச் சமைந்தது. வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி சமையல் தொழிலில் மிகத் தேர்ச்சி பெற்றவள். நமது விசாலாக்ஷியோ அவளிலும் ஆயிரமடங்கு அதிகத் தேர்ச்சி கொண்டவள். கோபாலய்யங்கார் பிராமண ஆசாரங்களைக் கைவிட்டுப் பாஷண்டராய் விட்டபோதிலும், “பிராமணா: போஜனப்ரியா:“ (பிராமணர் உணவில் பிரியமுடையோர்) என்ற வாக்கியத்தை அனுஸரிப்பதில் ஸாமான்ய வைதிக பிராமணர்களைக் காட்டிலும் நெடுந்-