பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௪

சந்திரிகை

காரே! உம்முடைய விதி உறுதியாய் விட்டது. உமக்கு விசாலாக்ஷியை மணம்புரிந்து கொள்ளும் பாக்கியம் இனிக் கிடையாது. காதலை எதிர்த்து யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதன் போக்கு காட்டுத் தீயின் போக்கையத்தது. அது தானாகவே எரிந்து தணியவேண்டும். அல்லது, தெய்வீகச் செயலாகப் பெருமழை பெய்து அதைத் தணிக்கவேண்டும். மற்றபடி, மனிதர் தண்ணீர்விட்டு அவிப்பது என்பது ஸாத்தியமில்லை.

நெடுநேரம் போஜனத்தில் செலவிட்டார்கள். பல விஷயங்களைக் குறித்து ஸம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கோபாலய்யங்கார் நாவிலிருந்த ரஸம் போய்விட்டது. அவர் அந்த அற்புதமான பக்குவங்களை ருசியின்றி உண்டார். பந்துலுவின் மனைவியும் பந்துலுவும் எதிர்பார்த்த வண்ணம் அவர் நிறைய உண்ணவுமில்லை. ஒவ்வொரு வகையிலும் சிறிது சிறிதுண்டார். பேச்சிலும் அவருக்கு அதிக ரஸமேற்படவில்லை. ஆஹாரம் முடிவு பெற்றது. படுக்கைக்குப் போகுமுன்னர் கோபாலய்யங்காரும் பந்துலுவும் படிப்பறையில் தனியே இருந்து வெற்றிலை போட்டுக் கொண்டார்கள். அப்போது பந்துலுவை நோக்கி கோபாலய்யங்கார்:— பந்துலுகாரு, “நான் விசாலாக்ஷியை விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை” என்றார். “ஏன்? அவளிடம் என்ன குறை கண்டீர்?” என்று பந்துலு கேட்டார்.

அதற்கு கேபாலய்யங்கார்:— “அவளிடம் நான் என்ன குற்றம் கற்பிக்க முடியும்? விசாலாக்ஷி