௪௮
சந்திரிகை
போகும். ஆனால் இந்த சிரமம் விசாலாக்ஷியை மணம்புரிந்து கொண்டாலும் ஏற்படத்தான் செய்யும். ஜாதிப்பிரஷ்டம் எப்போதுமுண்டு. ஆனால் அதை நான் பொருட்டாக்கவில்லை. உலகம் விசாலமானது. பிராமணர்கள் நம்மைக் கைவிட்ட போதிலும் சூத்திரர்கள் கைவிட மாட்டார்கள். பிராமணரின் தொகை குறைவு. சூத்திரர்களின் ஜனத்தொகை இந்த நாட்டில் அதிகம். ஆதலால், ஒருவனுக்கு ஜாதிப்பிரஷ்டத்திலிருந்து நேரும் கஷ்டம் அதிகமிராது. ஸ்நேகிதர்களும் இந்த விஷயத்தின் புதுமை மாறி இது பழங் செய்தியாய் விட்ட மாத்திரத்தில் முன்போலவே என்னுடன் பழகத் தொடங்கிவிடுவார்கள். ஊர்வாயை மூட ஒரு உலை மூடியுண்டு. அதன் பெயர் காலம். பழைய ஸ்நேஹிதர்கள் கைவிட்ட போதிலும், புதிய ஸ்நேஹிதர் ஏற்படுவார்கள். பணம் உள்ளவரை ஒருவனுக்கு ஸ்நேஹிதரில்லையென்ற குறைவு நேரிடாது. சர்க்கார் உத்தியோகமுள்ளவரை ஸ்நேஹிதரில்லையென்ற குறைவு நேராது” என்றார்.
”இருந்தாலும் தாங்கள் அந்த வேலைக்காரியை மணம்புரிந்து கொள்வதில் எனக்கு சம்மதில்லை. உலகத்தாரின் அபவாதத்தைப் பொருட்படுத்தாமல் நமது மனச்சாட்சியின்படி நடப்பதே தகும் என்பதே நான் அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். உலகத்தின் அபவாதம் பெரிதில்லை. ஆனால், நீங்கள் விரும்புகிறபடி விவாகம் செய்துகொள்ளக் கூடாதென்பதற்கு வேறு காரணங்களுமிருக்கின்றன” என்று வீரேசலிங்க பந்துலு சொன்னார்.