பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௨

சந்திரிகை

வேண்டும். அந்தப் பணிப்பெண் யார்? அவளுடைய பெயர் யாது? அவளென்ன ஜாதி? அவளுடைய பேற்றோர் அல்லது சுற்றத்தார் எங்கிருக்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு வீரேசலிங்கம் பந்துலு:— “அப்பணிப்பெண்ணுக்குப் பெயர் மீனாக்ஷி. அவள் ஜாதியில் இடைச்சி. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாது.... .......ஓஹோ ஹோ! இதில் ஒரு முக்கியமான விஷயத்தை யோசிக்க மறந்து விட்டீர்களே! ஒருவேளை ஏற்கெனவே அவளுக்கு விவாகம் ஆய்விட்டதோ என்னவோ?“ என்றார்.

“அதைக் குறித்துத் தங்களுக்கு சம்சயம் வேண்டியதில்லை. நான் காலையிலேயே அவளுடைய கழுத்தை நன்றாக கவனித்தேன். அவளுடைய கழுத்தில் தாலியில்லை “என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

“தாலி ஒரு வேளை ரவிக்கைக்குள்ளே மறைந்து கிடந்திருக்கக்கூடும். தங்கள் கண்ணுக்கு அகப்படாமலிருந்திருக்கலாம்“ என்றார் பந்துலு.

“அதைக் குறித்தும் சம்சயம் வேண்டியதில்லை. காதலுக்குக் கண் கிடையாதென்று சிலர் தப்பான பழமொழி சொல்லுகிறார்கள். காதலுக்கு மிகவும் கூர்மையான கண்களுண்டு. நான் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்தேன். தாலியில்லையென்பது எனக்குப் பரம நிச்சயம். அவளுக்கு விவாகமாகவில்லை. அவள் முகத்தைப் பார்த்ததிலேயே அவள் விவாகமாகாதவளென்பது எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டது.