பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௬

சந்திரிகை

மென்று தெரியாமல் மிகவும் ஸங்கடப்படுவாராம். நியாயம் எப்படி வேண்டுமானாலும் போகுக என்றெண்ணி, ஸௌகர்யப்படிக்கும் மனம் போனபடிக்கும் தீர்ப்புச் செய்யுங் குணம் அவரிடம் கிடையாது. எப்படியேனும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி செலுத்த வேண்டுமென்பது அவருடைய கொள்கை. ஆனால், அங்ஙனம் செய்யப் புகுமிடத்தே, “வாதி சொல்வதைக் கேட்டால் வாதி கக்ஷி உண்மை யென்று தோன்றுகிறது. பிரதிவாதி சொல்வதைக் கேட்டால் பிரதிவாதி கக்ஷி மெய்யென்று தோன்றுகிறது. நான் எந்தத் கக்ஷிக்குத் தீர்ப்புச் சொல்வேன்?” என்று அவர் தம்முடைய நண்பரிடங் கூறி வருத்தப்படுவாராம். இது பற்றி அவருடைய நண்பர்கள் அந்த நியாயாதிபதிக்கு தர்மஸங்கடம்—சங்கரய்யர் என்று பட்டப் பெயர் சூட்டினார்கள்.

இவ்வுலகத்தில் வெறுமே நீதிஸ்தலத்து வழக்குக்களின் விஷயத்தில் மாத்திரமேயன்றி, ஜனஸமூஹ ஸம்பந்தமாகவும், மதஸம்பந்தமாகவும், பிற விஷயங்களைப் பற்றியும் தோன்றும் எல்லா வழக்குகளிலும் இங்ஙனமே நடு உண்மை கண்டு பிடித்தல் சாலவும் சிரமமென்று நான் நினைக்கிறேன். அளவற்ற தவமும் அதனால் விளையும் ஞானத்தெளிவுமுடையோரை எதிலும் பக்ஷபாதமற்ற மயக்கமற்ற நடு உண்மை கண்டு தேரவல்லார். மற்றப்படி உலகத்து வழக்குக்கள் பெரும்பான்மையிலும், வலிமையுடைய மனிதருக்கும் வகுப்புக்களுக்கும் சார்பாகவே நியாயந் தீர்க்கப்படுகின்றது. “பொய்யுடை