௬௮
சந்திரிகை
முன்பு நான் வேறெந்த வேலையையும் கவனிக்க மாட்டேன். எத்தனை சிரமப்பட்டேனும் உன் நோக்கத்தை நான் நிறைவேற்றிக் கொடுக்கிறேன். பயப்படாதே என்று பந்துலு சொன்னார்.
அப்படியானால், என்னை ஜனவரி பதினெட்டாந் தேதியா இங்கு வரச் சொல்லுகிறீர்கள்? என்று விசாலாட்சி கேட்டாள்.
இன்னும் ஏழெட்டு நாளில் கோபாலய்யங்கார் விஷயம் முடிந்து போய்விடும். எனவே ஜனவரி பத்தாந் தேதி இங்கு வந்துவிடு என்றார் பந்துலு.
அப்பால் பந்துலுவிடமும் அவர் மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டு விசாலாட்சி, சந்திரிகை சகிதமாக, மயிலாப்பூர் லஸ் சர்ச் ரஸ்தாவில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
வக்கீல் சோமநாதய்யரின் மனைவிக்குப் பெயர் முத்தம்மா. நமது விசாலாட்சியை கண்டவுடன் இவள் மிகுந்த ஆவலுடன் நல்வரவு கூறி உபசாரம் பண்ணினாள். இவ்விருவரும் அத்தங்கார் அம்மங்கார் என்ற உறவு மாத்திரமேயன்றி பால்ய முதலாகவே மிகவும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தவர்கள். [மாமன் மகளுக்கு அம்மங்கார் என்றும், அத்தை மகளுக்கு அத்தங்கார் என்றும் பிராமணர்களுக்குள்ளே பெயர்கள் வழங்கி வருகின்றன. நமது கதை வாசிக்கும் இதர ஜாதியார்களில் சிலருக்கு ஒரு வேளை இச்சொற்கள் தெரியாமலிருக்கக் கூடுமாதலால் அவற்றை இங்கு விளக்கிக்கூறினேன்] முத்தம்மா திருநெல்-