௬
சந்திரிகை
உடம்புகளும் பிரேதங்களாக விழுந்து கிடந்தன. முழுக்காட்சியும் அவள் பார்க்க நேரமில்லை. காற்றினாலும் மழையினாலும் மோதுண்டு வீதியில் வந்து கிடந்த பிரேதங்களை மாத்திரமே அவள் கண்டாள். இடிந்த வீடுகளுக்குள்ளே செத்துக் கிடக்கும் ஜனங்களை அவள் காணவில்லை. எனினும், தன் வீட்டில் எல்லாரும் செத்தது அவளுக்குத் தெரியுமாதலால், மற்ற வீடுகளிலும் அப்படியே நடந்திருக்க வேண்டுமென்றும் அதுகொண்டே தெருவில் ஆட்களைக் காணவில்லையென்றும் அவள் ஊகித்துக் கொண்டாள். அப்பொழுது மீண்டும் அவளுடைய மனதில், சென்ற பயங்கரமான இரவில் நிகழ்ந்த பயங்கரமான செய்திகள் நினைப்புறலாயின. பூகம்பம் தோன்றினவுடனே மகாலிங்கையருடைய தந்தையாகிய கிழவர்:— “ஐயையோ, பூமி ஆடுகிறதே! நாமெல்லாரும் வாயிற்புறத்திலுள்ள குச்சிலுக்குப் போய் விடுவோம். அதுதான் இவ்வீட்டில் சற்றே உறுதியான இடம். என்னை அங்கே கொண்டு விடுங்கள்” என்று அலறினார். அந்தச் சத்தம் மாத்திரம் விசாலாக்ஷியின் செவியிற்பட்டது. அப்புறம் நடந்த பேச்சொன்றும் அவள் செவியிற் படவில்லை. வாயிற் குச்சிலுக்குள் வெளித் திண்ணை வழியாகத்தான் புகலாம். வீட்டுக்குள்ளிருந்தபடியே அங்கு வர வழியில்லை. எனிலும், ஒரு சாளரப் பொந்து வழியாக அந்தக் கிழவருடைய பேரோலம் மாத்திரம் புயற் காற்றொலியையும் மிஞ்சி அவளுடைய செவியிற்பட்டது.