பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூகம்பம்

ஆனால், அங்ஙனம் அவர்கள் குச்சிலுக்குள் வருவது மாத்திரம் சாத்தியமில்லை யென்பதை அவள் உடனே ஊகித்துக் கொண்டாள். ஏனெனில், உள்ளேயிருந்தவர்கள் வீட்டு வாயிற்கதவைத் திறந்தன்றோ, திண்ணையிலேறி அதன் வழியாகக் குச்சிலுக்குள் வரவேண்டும்? வாயிற்கதவைத் திறந்த மாத்திரத்திலே சப்த மேகங்களும், ஊழிக்காற்றும் வீட்டுக்குள் புகுந்து விடுமன்றோ? ஆதலால், அவர்கள் வெளியேற வில்லையென்று நினைத்துக் கொண்டாள். ஓரிரண்டு க்ஷணங்களில் திடீரென்று உள் வீடெல்லாம் இடிந்து விழுந்த ஒலியும், அங்கிருந்தோர் எல்லாம் கூடியலறிய பேரொலியும், அவள் செவியிற்பட்டன. எல்லோரும் செத்தார்கள் என்று நிச்சயித்துக் கொண்டாள். தானிருந்த குச்சிலும் விழுமென்று அவள் மிகவும் எதிர்பார்த்தாள். அது விழவில்லை. அதற்குள்ளே பூகம்பம் நின்று போய்விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் புயற்காற்றும் மழையும் அடங்கிப் போயின.

இச்செய்திகளையெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு விசாலாட்க்ஷி தன்னைச் சூழ இடிந்து கிடக்கும் வீடுகளையும் ஒடிந்து கிடக்கும் மரங்களையும் பார்த்து நிற்கையிலே, குச்சிலுக்குள்ளிருந்து “குவா!” “குவா!“ என்ற சத்தம் வந்தது. உள்ளே போய்ப் பார்த்தாள். அண்ணன் மனைவியாகிய கோமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து கிடந்தது. விசாலாக்ஷி அதற்கு வேண்டிய சிகிச்சைகளெல்லாம் செய்து கொண்டிருக்கையில், கோமதிக்கு மரணாவஸ்தை