பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௮௨

சந்திரிகை

முக்தி இஹலோகத்தில், அதாவது இந்த சரீரத்தில் ஸாத்தியம்” என்றார்.

“ஆனால் இந்த சரீரத்தில் ஏற்படும் முக்தி எப்போதைக்கும் சாசுவதமாக நிற்பது நிச்சயமில்லை“ என்று குப்புசாமி தீக்ஷிதர் சொன்னார்.

“உமக்கு விடுதலை என்றால் இன்னதென்று விஷயமே புலப்படவில்லையென்று தெளிவுபட விளங்குகிறது. விடுதலையென்பது ஒருகாற் பெறப்படுமானால் மறுபடி தளையென்பதே கிடையாது. முக்திக்குப் பிறகு பந்தமில்லை. ஸர்வபந்த நிவாரணமே முக்தி. அந்த ஸர்வ பந்த நிவாரணமாவது ஸர்வ துக்க நிவாரணம்—ஸர்வ துக்கங்களையும் ஒரேயடியாகத் தொலைத்துவிடுதல். அந்த நிலைமை பெற்ற பிறகும் ஒருவன் மறுபடி பந்தத்துக்குக் கட்டுப்பட இடமுண்டாகுமென்று சொல்லுதல் பொருந்தாது“ என்று முத்துஸுப்பா தீட்க்ஷிதர் சொன்னார்.

“ஸுவர்க்கலோகத்திற்குப் போன பிறகும் அங்கிருந்து வீழ்ச்சி யேற்படுவதாக நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே—அதன் தாத்பர்யமென்ன?“ என்று குப்புசாமி தீக்ஷிதர் கேட்டார்.

“அந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. ஜீவன் முக்திக்கு நான் சொன்னதுதான் சரியான அர்த்தம். அதை எந்த சாஸ்திரத்திலும் பார்த்துக் கொள்ளலா“ மென்று முத்துஸுப்பா தீக்ஷிதர் சொன்னார்.

இவர்கள் இந்த விஷயத்தைக் குறித்து நெடுநேரம் வார்த்தைபாடிக் கொண்டிருந்தார்கள்.