விடுதலை
௮௫
அதாவது, அவர் இன்னும் ஜீவன் முக்தி அடைந்துவிடவில்லை. அடைய வேண்டிய மார்க்கத்திலிருந்தார். தாம் முக்தி அடைந்துவிட்டதாகவே அவர் பிறரிடம் சொல்லியது மட்டுமன்றித் தம்முடைய மனத்துக்குள்ளும் அவ்வாறே நிச்சயப்படுத்திக் கொண்டு விட்டார்.
விசாலாக்ஷி தம் வீட்டுக்கு வந்த தினத்திற்கு மூன்று நாட்களின் பின்பு ஒரு மாலையில், நிலவு தோன்றும் பருவத்தில் மிட்டாய்கடை சங்கரய்யர் தமது வீட்டு மேடையில் அழகிய நிலா முற்றத்தில் நான்கு நாற்காலிகள் போட்டு நடுவே மேஜையின் மீது பக்ஷணங்கள், தேநீர், வெற்றிலை, பாக்கு, பூங்கொத்துக்கள் முதலியன தயார் செய்து வைத்தார். சங்கரய்யரும், காசியிலிருந்து வந்திருக்கும் பால ஸந்நியாஸியும், சங்கரய்யருடைய மனைவி பிச்சுவும், விசாலாக்ஷியும் நால்வரும் அந்த நான்கு நாற்காலிகள் மீதிருந்து கொண்டு சிற்றுண்டி யுண்ணத் தொடங்கினர். குழந்தை சந்திரிகை கீழே படுத் துறங்கிவிட்டாள். அவளுக்குக் காவலாகக் கிழ இடைச்சி, ஒரு வேலைக்காரி, படுத்திருந்தாள்.
நேர்த்தியான நிலவிலே மிட்டாய்க்கடை சங்கரய்யர் வீட்டு மேடையில், அந்நால்வரும் பல வகையான இனிய பண்டங்களை மெல்ல மெல்ல எடுத்துண்டு கொண்டிருக்கையிலே, சங்கரய்யருக்கும் காசியிலிருந்து வந்த பால ஸந்நியாஸிக்கும் வேதாந்த விஷயமான ஸம்பாஷணை தொடங்கிற்று. சங்கரய்யர் வேதாந்தக் கிறுக்குடையவர். அதனாலேதான், அவர் இந்த