பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௮௯

சந்திரிகை

ஸந்நியாஸியைக் கண்டு பிடித்தவுடனே பரம குருவாக பாவித்துத் தம் வீட்டுக் கழைத்து வந்து தம்முடனேயே சில தினங்கள் தங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டார். ஸந்நியாஸியின் பெயர் நித்யானந்தர். அவருக்கு வயது இருபத்தெட்டுக்கு மேலிராது. மஹா ஸுந்தர ரூபி. வடிவெடுத்த மன்மதனைப் போன்றவர். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே நமது விசாலாக்ஷி அவர்மீது அடங்காத மையல் கொண்டுவிட்டாள். ஸந்நியாஸியும் அங்ஙனமே விசாலாக்ஷியின் மீது பெரு மையல் பூண்டார். ஸந்நியாஸி மையல் கொள்ளுதல் பொருந்துமோ என்று நீங்கள் கேட்பீர்களாயின் அது சரியான கேள்வியன்று. மன்மதனுடைய பாணங்கள் யாரைத் தான் வெல்லமாட்டா?

காற்றையும் நீரையும் இலையையும் புஜித்து வந்த விசுவாமித்திரன் முதலிய மஹரிஷிகள் கூட மன்மதனுடைய அம்புகளை எதிர்த்து நிற்க வலிமையற்றோராயினர் என்று பர்த்ருஹரி சொல்லுகிறார். எட்டயாபுரம் கடிகை முத்துப் புலவர் தம்முடைய நூல்களுளன்றில் மன்மதனை எல்லாக் கடவுளரிலும் வலிமை கொண்ட பெரிய கடவுளாகக் கூறுகிறார். பார்வதியை மறந்து தவம் செய்து கொண்டிருந்த சிவபிரான் மீது மன்மதன் அம்புகள் போட்டபோது, அவர் கோபங் கொண்டு மன்மதனை எரித்தாரேயன்றி, அவன் அம்புகளின் திறமையை விழலாக்கி மறுபடி யோகம் பண்ணத் தொடங்கினாரோ? அன்று; அவர் காமனம்புகளுக்குத் தோற்று ஜகன்மாதாவை மணம்