பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬௨

சந்திரிகை

சொல்லாதேயுங்கள். ஸந்நியாஸக் கோலத்தையும் தொலைத்தேன்; பழைய நித்தியானந்த னென்ற பெயரைக்கூடத் தொலைத்து விட்டேன். இனிமேல் எனது பிரிய காந்தை யாகிய விசாலாக்ஷியின் பெயருக்கேற்ப விசுவநாத சர்மா என்று பெயர் வைத்துக்கொள்வேன்” என்றார். எனவே நானும் இக்கதையில் இவருக்கு நித்யானந்தர் என்ற பெயரை நீக்கி விசுவநாத சர்மா என்ற பெயரையே வழங்கி வருதல் அவசியமாகிறது.

விசுவநாத சர்மாவை இந்த லௌகிக வேஷத்தில் பார்த்த மாத்திரத்திலே விசாலாக்ஷிக்கு ஏற்கெனவே அவர் மீதேற்பட்டிருந்த கண் தலை தெரியாத காதல் முன்னிலும் ஆயிர மடங்கு அதிகமாய், அவளை வெறி கொண்டவள் போலாக்கி விட்டது.

இவ்விருவரும் வீரேசலிங்கம் பந்துலுவிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, விசாலாக்ஷி பந்துலு விடத்திலும் அவர் மனைவி யிடத்திலும் தன்னை விசுவநாத சர்மா மணம் செய்துகொள்ள இணங்கிய செய்தியையும், அவ்வாறு இணங்கும்படி நேர்ந்த பூர்வ விருத்தாந்தங்களையும் எடுத்து விஸ்தாரமாகச் சொன்னாள். வீரேசலிங்கம் பந்துலுவுக்கு அளவிறந்த மகிழ்ச்சியுண்டாய்விட்டது. ஏற்கெனவே இவ்விஷயத்தில் அவர் பல இடங்கில் முயற்சிசெய்து பார்த்து வெற்றிபெற வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய முயற்சியில்லாமலே தமது விருப்பம் நிறைவேறி விட்டமை கண்டு அவருக்கு அத்தனை பூரிப்புண்டாயிற்று.