பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலை

௯௫

அவருடைய முகத்தில் முன்னிருந்த கவலைக் குறிகளெல்லாம் நீங்கிப் போய்விட்டன. எப்போதும் அவர் முகத்தில் ஸந்தோஷமும் திருப்தியும் நிலவலாயின. விசாலாக்ஷியோ முன்னிருந்த அழகைக் காட்டிலும் முந்நூறு பங்கு அதிக அழகு படைத்து விட்டாள். அவர்கள் வீட்டிற்கு ஒரு பசு வாங்கினார்கள். அந்தப் பசுவைக் கறக்கவும், குழந்தைக்குப் பொழுது போகவும், மற்றபடி வீடு வாயில் பெருக்குதல், பாத்திரந் தேய்த்தல் முதலிய தொழில்கள் செய்யவும், விசாலாக்ஷி மிகவும் புத்தியும் அனுபவமும் உண்மையும் உழைப்புமுடைய வேளாளக் கிழவியருத்தியை நியமனம் செய்து, அவளுக்கு வீட்டிலேயே போஜனமும் மாஸம் எட்டு ரூபாய் சம்பளமும் ஏற்படுத்தினாள். இவர்களுடைய வீட்டுச் செலவெல்லாம் நூறு ரூபாய்க்கு மேலாகாது. எனவே, மாஸந்தோறும் நானூறு ரூபாய்க்குக் குறையாமல் விசுவநாத சர்மா ஒரு பெரிய நாணயமுடைய குஜராத்தி வியாபாரியிடம் வட்டிக்குக் கொடுத்துவரத் தொடங்கினார். சிறிதுகாலத்துக்குப்பின் விசுவநாத சர்மா தமக்குப் பத்திரிகைத் தொழிலிலேயே ஏராளமான திரவியம் கிடைப்பதினின்றும், பிள்ளைகளுக்குப் பாடங் கற்றுக் கொடுப்பதாகிய சிரமமான தொழிலை விட்டுவிட்டார். காலையில் எழுந்து கைகால் சுத்தி செய்து கொண்டவுடனே தினந்தோறும் அவர் தங்கசாலைத் தெருவினின்றும் புறப்பட்டுச் சென்னை ஹைகோர்ட்டுக்கு எதிரே கடற்கரையில் வந்து நெடுநேரம் உலாவிவிட்டு