12
சமணமும் தமிழும்
எனவரும் மணிமேகலை அடிகளாலும் இதனை அறியலாம். தர்மம், அதர்மம் என்னும் இவை, ஆகாயம் பரந்துள்ள வரையில் நிறைந்து இருக்கின்றன.[1]
காலம் என்பது, இமைத்தல் நொடித்தல் முதலிய சிறுகாலம் முதல் கற்பகாலம் முதலிய பெரிய கால அளவு ஆகும்.
"காலம் கணிகம் எனுங்குறு நிகழ்ச்சியும்
மேலும் கற்பத்தின்நெடு நிகழ்ச்சியும் ஆக்கும்."
(மணிமேகலை 27: 191--192)
ஆகாயம் என்பது, சமண சமயக் கொள்கைப்படி ஐம்பூதங்களுள் ஒன்றன்று. தர்மம், அதர்மம், காலம், உயிர்கள், புத்கலங்கள் ஆகிய இவ்வைந்து பொருள்களும் தங்குவதற்கு இடம் கொடுப்பது ஆகாயம்.
“..... ஆகாயம் எல்லாப் பொருட்கும்
பூக்கும் இடங்கொடுக்கும் புரிவிற்றாகும்”
(மணிமேகலை, 27: 193-194)
ஆகாயம் லோகாகாயம் என்றும், அலோகாகாயம் என்றும் இரண்டு வகைப்படும். லோகாகாயம் என்பது, மேலே கூறியபடி புத்கலம் முதலிய ஐந்து பொருள்களுக்கும் இடம் கொடுப்பது. அலோகாகாயம் என்பது லோகாகாயத்திற்கு இடம் கொடுத்து நிற்பது. இவையே உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம்.
- ↑ மாதவச் சிவஞான யோகிகள் தமது சிவஞானபோத மாபாடியத்திலே ஆருகத மதத்தைக் கூறுகிறபோது (அவையடக்கம்) “தன்மம் ... நன்மையைப் பயப்பது; அதன்மம் தீமையைப் பயப்பது” என்று எழுதியிருப்பது சமண சமய தத்துவக் கருத்துப்படி தவறாகும். தன்மம், அதன்மம் என்பவற்றைப் புண்ணியம் பாவம் என்னும் பொருளில் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று.