பக்கம்:சமணமும் தமிழும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமண சமய த‍த்துவம்

15


வீரியம், கேவல சுகம் என்னும் கடையிலா அறிவு, கடை யிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்பவைகளை அடைந்து, எல்லா உலகங்களுக்கும் உயர்ந்த உலகமாகிய பெறற்கரிய வீட்டுலகம் பெற்று எல்லோராலும் வணங்கப்படும் அருகந்த நிலையை யடைவது மோக்ஷம் அல்லது வீடு எனப்படும்.

"வருவழி இரண்டையும் மாற்றி முன் செய்
அருவினைப்பயன் அனுபவித் தறுத்திடுதல்
அது வீடாகும்.” (மணிமேகலை, 27: 199-201)

இந்த ஒன்பது பொருள்களின் விரிவான விளக்கத்தைச் சமண சமய நூல்களில் கண்டுகொள்க.

குறிப்பு: சமண சமய த‍த்துவ நூல்களில் கடவுளைப் பற்றிக் கூறவில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டு மோக்ஷ நிலையையடைந்த உயிரே கடவுள் என்பது சமணசமயக் கருத்து. சைவம், வைணவம் முதலிய சமயங்களில், உயிர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிக்கடவுள் கூறப்படுவதுபோல, சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை.

மேற்கூறிய ஒன்பது பொருள்களின் உண்மையை அறிந்து கொள்வது நன்ஞானம் என்றும், இவற்றின் தன்மையை ஐயப்பாடின்றி உணர்ந்து கொள்வது நற்காட்சி என்றும், நன்ஞானம் நற்காட்சி இரண்டையும் ஒருதன்மைத்தாக மனத்திற்கொண்டு ஒழுகுவது நல்லொழுக்கம் என்றும் கூறப்படும். இதனை இரத்தினத் திரயம் என்றும் மும்மணி என்றும் கூறுவர். இரத்தினத்திரயம் வீடு பேற்றிற்கு இன்றியமையாத‍து.

“மெய்வகை தெரிதல் ஞானம், விளங்கிய பொருள்கள் தம்மை
பொய்வகை இன்றித் தேறல் காட்சி;ஐம் பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத் தேயா தொழுகுதல் ஒழுக்கம், மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்.”
                                                 (சிந்தாமணி, கேமசரியார், 25)