பக்கம்:சமணமும் தமிழும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணமுனிவர் ஒழுக்கம்

19


வும் மாட்டேன்; மனம் மொழி மெய்களால் முக்காலங்களிலும் மெய்மையே பேசுவேன்," என்று உறுதி கூறி ஆருகத முனிவர் வாய்மை என்னும் விரதத்தை மேற் கொள்கிறார்.

3. கள்ளாமை: எவ்வளவு அற்பமான பொருளாயிருந்தாலும், அதனை அதற்குரியவர் கொடுத்தாலன்றி, எடுத்துக்கொள்ள மனத்தினாலும் நினையாதிருத்தல். "நாட்டிலாயினும் காட்டிலாயினும் கிராமத்திலாயினும் நகரத்திலாயினும் பிறர்க்குரிய பொருளை - அது அற்பமானதாயிருந்தாலும் விலைமதிக்கத் தக்கதாயிருந்தாலும், உயிருள்ளதாயிருந்தாலும் உயிரற்றதாயிருந்தாலும் -, அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதனை எடுத்துக்கொள்ளமாட்டேன் ; பிறர் எடுத்துக்கொள்ளவும் உடன்படமாட்டேன், மனம் மொழி மெய்களால் கள்ளாமையை மேற்கொள்கிறேன்" என்று உறுதி கூறி சமண முனிவர் இந்த மூன்றாவது விரதத்தை மேற்கொள்கிறார்.

4. பிரமசரியம்: அதாவது புணர்ச்சி விழையாமை. சிற்றின்பத்தை மனம் வாக்குக் காயங்களால், செய்யா திருத்தல்.

“தெய்வங்களுடனாவது மனிதர்களுடனாவது விலங்குகளுடனாவது இணைவிழைச்சாகிய சிற்றின்பத்தைத் துய்க்க மாட்டேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்யாதிருக்க உறுதி கூறுகிறேன்” என்று கூறி சமணத் துறவி இந்த நான்காவது மாவிரதத்தை மேற்கொள்கிறார்.

5. அவாவறுத்தல்: அதாவது முற்றத் துறத்தல். “துறத்தலாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்” என்றார் சமணராகிய இனம்பூரண அடிகள், இதனைப் பரிக்கிரகத் தியாகம் என்பர்.

“அவாவென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து” (குறள்:௩௬௧)