பக்கம்:சமணமும் தமிழும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணமுனிவர் ஒழுக்கம்

21


நடக்கவேண்டும் என்றார் சிந்தாமணி ஆசிரியர். கொல்லா நோன்பை அடிப்படையாகக் கொண்டவர் ஆதலால் எறும்பு, புழு, பூச்சி முதலிய சிற்றுயிர்களும், நடக்கும்போது காலினால் மிதிபட்டிறவாதபடி விழிப்பாகத் தரையைப்பார்த்துச் சமணத்துறவி நடக்கவேண்டும். இதுபற்றியே அவர் இராக்காலங்களில் பிரயாணம் செய்யார். வழியில் உள்ள சிற்றுயிர்கள் காலில் மிதிபடாதபடி ஒதுக்குவதற்காக மயிற்பீலிக் குஞ்சத்தை அவர் கையில் வைத்திருப்பார். இதுவே இரியா சமிதி எனப்படும்.

2. பாஷா சமிதி: நாவடக்கம் அல்லது வாக்கடக்கம். பழித்துப் போதல், புகழ்ந்து பேசுதல், கோபமாகப் பேசுதல், கடுஞ்சொற்கூறல் முதலிய பேச்சுகளை நீக்கி இனிமையாகப் பேசுவதையும், தரும ஒழுக்கம் சமயக் கொள்கை இவற்றைப் போதிப்பதையும் துறவி தமக்கு ஒழுக்கமாகக் கொள்வது பாஷா சமிதி எனப்படும்.

3. ஏஷணா சமிதி: நாற்பத்தாறுவகையான குற்றங்கள் இல்லாத உணவைச் சமனத்துறவி யாசித்திப் பெற்று அதிகமாக உண்ணாமல் அளவாக உண்ணுதல் ஏஷணா சமிதியாகும். உணவின் நாற்பத்தாறுவகைக் குற்றங்களைச் சமண நூல்களில் கண்டுகொள்க.

4. ஆதான நிக்ஷேபனா சமிதி: சமண முனிவருக்குரிய நூல் (புத்தகம்), குஞ்சம் (மயிற்பீலி), கமண்டலம் என்னும் இப்பொருள்களை எடுக்கும்போதும் வைக்கும் போதும் எறும்பு முதலிய சிறு உயிர்கள் இறந்துபோகாதபடி விழிப்போடு இருந்து பைய எடுத்தலும் பைய வைத்தலுமாம்.

5. உத்சர்க்க சமிதி: சமணத் துறவி மலமூத்திரங் கழிக்கும்போது, ஊருக்கு அப்பால், ஒருவரும் நடமாடாததும் பாராததுமான இடத்தில் கழிக்கவேண்டும். அன்றியும் புழுப்பூச்சிகள் உள்ள இடங்களிலும் வளை முதலியவையுள்ள இடங்களிலும் கழிக்கக் கூடாது.