பக்கம்:சமணமும் தமிழும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சமணமும் தமிழும்


ஐம்பொறி அடக்கம்: ஐம்பொறிகளின் வாயிலாகவே நல்வினை தீவினைகள் உயிரைப்பற்றிப் பிணித்து, அதனைப் பிறப்பு இறப்புகளிற் செலுத்துகிறபடியால் ஐம்பொறிகளை அடக்கவேண்டுவது துறவிகள் கடமை. நாட்டியம், நடனம் முதலிய காட்சிகளைக் காண்பதும், பாட்டு, யாழ், வீணை முதலிய இசைகளைக் கேட்பதும், சந்தனம், பூ முதலியவற்றின் நறுமணங்களை முகர்வதும், அறுசுவையுணவுகளை உண்பதும், ஊறு என்னும் புலனுக்கு இன்பமளிக்கிற பொருள்களைத் தொடுதல் தேய்த்தல் முதலியவற்றைச் செய்வதும் ஆகிய ஐம்புலநுகர்ச்சியை மனம் மொழி மெய் களாலும் நீக்குதல் ஐம்பொறியடக்கம் எனப்படும். தீர்த்தங்கரர், அருகர் முதலிய கடவுளர்களின் தோத்திரப் பாக்களைப் பாடும் இசைப்பாட்டு முதலியவற்றைக் கேட்பது, அவர்களின் சரித்திரங்களை நாடகங்களில் காண்பது முதலியவை கடவுட்பற்றுக்குக் காரணம் ஆகையால் அத்தகையவற்றைச் சமணமுனிவர் ஐம்பொறிகளாலும் துய்க்கலாம். ஆனால், சிற்றின்பத்திற் செலுத்தக்கூடிய ஐம்பொறி இன்பகளை மட்டும் அடக்க வேண்டும்.

“மெய்வாய் கண்மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினை - கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்”

என்பது நாலடி நானூறு என்னும் சமண நூல்.

ஆவஸ்யகம் ஆறு: இவை ஷடாவஸ்யக்கிரியை எனப்படும், அலையாவன: 1. சாமயிகம்' 2. துதி. 3. வணக்கம். 4. பிரதி கிர்மணம். 5. கழுவாய். 6. விசர்க்கம் என்பன. இவற்றின் விளக்கம் வருமாறு.

1. சாமயிகம்: இன்ப துன்பம், நன்மை தீமை உயர்வு தாழ்வு முதலியவற்றை ஒரு தன்மையாக (சமமாகப்) பார்த்தல்.