பக்கம்:சமணமும் தமிழும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணமுனிவர் ஒழுக்கம்


(நீராடாமை) விரதங்கொண்டதல்லது பாங்கள் சரீரத்து மலமாக்க வேண்டுமென்று சொல்லியதூஉம் செய்ததூஉம் இல்லை” (மொக்கல. 318-ஆம் பாட்டுரை)

“செற்றம்விட்டார் திருமேனியெல்லாம் மாசுவிம்ம
வற்றவிட்டார் .....நம்தொழு தெய்வமே”

என்பது திருநூற்றந்தாதி.

சமணமுனிவர் நீராடாமைக்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். நீரில் மிகச்சிறிய கண்ணுக்குப் புலப்படாத உயிர்கள் உள்ளன என்பது சமண மதக்கொன்கை. சிற்றுயிரையும் கொல்லாத அகிம்சா விரதத்தை முதன்மையாகக் கொண்ட சமணமுனிவர், உடற் றூய்மைக்காக நீராடினால் அந்நீரில் உள்ள நுண்ணுயிர்கள் ஊறுபட்டு இறந்துபடும் என்றஞ்சிப்போலும் அவர் நீராடாதொழிந்தது எனக் கருதுவதும் பொருந்தும். நீரில் உயிர் அணுக்கள் உள்ளமைபற்றியே சமண முனிவர் நீருண்ணும் போது ஏழுமுறை வடிகட்டிய பின்னர்க் குடிக்கவேண்டும் என்னும் ஒழுக்கத்தைச் சட்டமாக வைத்துள்ளனர்.

4. தரையிற் படுத்தல்: பாய் படுக்கைகளின்றித் தரையின்மீது படுத்து உறங்கும்போது கல் மண் உறுத்துவதனால் உண்டாகும் வேதனைகளைப் பொறுத்தல். படுக்கும்போது இடது அல்லது வலது பக்கமாகப் படுக்க வேண்டும் என்பதும், குப்புறப் படுப்பதும் மல்லாந்து படுப்பதும் கூடாது என்பதும் கட்டளை. எறும்பு, புழு, பூச்சிகள் நசுங்கி இறவாதபடி அவை இல்லாத இடங்களில் படுக்கவேண்டும்.

5. பல் தேய்க்காமை: உடம்பும் மிகை என்று தமது உடம்பையும் துறந்த சமண முனிவர் பல்தேய்த்துச் சுத்தம் செய்யார். அப்படிச் செய்வது, தாம் புறக்கணித்துவிட்ட உடம்பின் மீது மீண்டும் பற்றினை உண்டாக்கும் எனக் கருதுவர். இதனால், அவர்கள் தமது உடலையுங்கூட எவ்வளவு திடமாகப் புறக்கணித்தனர் என்பது அறியப்படும்.