பக்கம்:சமணமும் தமிழும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு

35


சந்திரகுப்த அரசனுக்குச் சமய குருவாக இருந்த பத்திரபாகு முனிவர், மகத நாட்டில் பன்னிரண்டு யாண்டு வற்கடம் வரப்போவதையறிந்து அச்செய்தியை அரசனுக்கு அறிவித்து, வரப்போகும் வற்கடக் கொடுமையினின்றும் தப்பிக்கக் கருதித் தம்மைச் சார்ந்திருந்த பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்திசை நோக்கிப் புறப்பட்டு வந்தார். சந்திரகுப்த அரசனும், அரசைத் துறந்து துறவு பூண்டு பத்திரபாகு முனிவரின் சீடனாகி அவருடன் வந்தான். தென்திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர், மைசூர் நாட்டில் வந்து, சமணர் வெள்ளைக்குளம் என்னும் பொருள்படும் சிரவணபெள்கொள என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற இடத்தில் தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார். தங்கின பிறகு, தம் சீடர்களில் ஒருவரான விசாகமுனிவர் என்பவரை அனுப்பிச் சோழ பாண்டிய நாடுகளில் சமணசமயக் கொள்கைகள்ப் பரவச் செய்தார். பின்னர், கி. மு. 297-ல் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனையிருந்து வீடுபெற்றார். இவர் சீடராக இருந்த சந்திரகுப்தரும் அவ்விடத்திலேயே சல்லேகனை நோன்பிருந்து உயிர்நீத்தார்.[1]

இச்செய்திகளைச் சமணசமய வரலாறுகளினால் அறியப்படும். அரிசேனர் என்பவர் (கி. பி. 981-இல்) இயற்றிய பிருகத் கதா கோசம் என்னும் நூலிலும், தேவசந்திரர் கன்னட மொழியில் (கி. பி. 1838-இல்) இயற்றிய “ராஜாவளி கதெ” என்னும் நூலிலும் சமணர்களின் கர்ணபரம்பரைச் செய்திகளிலும் இவ்வரலாறுகள் கூறப்படுகின்றன. அன்றியும், மைசூரில் உள்ள சந்திரகிரி மலையில் பத்திரபாகு குகை என்னும் குகையும் சந்திரகுப்த பஸ்தி என்னும் சமாதிக்கட்டிடமும் இன்னும் உள்னன. சந்திரகுப்த பஸ்தியில், சந்திரகுப்த பத்திரபாகு வரலாறுகள் சிற்ப உருவங்களாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.


  1. வடக்கிருத்தல் - சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க.