பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தமிழுக்கு அவர்கள் கொடுத்த கொடையிலேயே பெரிய கொடை, விருத்தப்பாவை தமிழுக்குக் கொடுத்த கொடை என்று நான் கருதுகிறேன் விருத்தப்பாவை கொடுத்து, தமிழுக்கு ஒரு வீரியத்தை அவர்கள் சேர்த்திருக்கிறார்கள். சிந்தாமணி என்பதை ஒரு சாதாரண இலக்கியமாக, என்னால் சொல்ல முடியவில்லை. சிந்தாமணியினுடைய கற்பனைச் சுவையயும் கனிச்சுவையும், அந்தச் சிந்தாமணியிலே ஆழ்ந்து கிடக்கிற உவமை நயங்களும் சேர்ந்து ஓர் உன்னதமான இலக்கியப் படைபாக்கியிருக்கிறது. அது ஒரு மத இலக்கியம் என்று பார்ப்பதற்கு தேடித்தேடி எங்கேயாவது சான்றுகள் நாம் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, எதுவும் துருத்தித் தெரியாதபடி அது இயல்பாக அமைந்துள்ளது. எப்பொழுதுமே குறைகள் என்பது துருத்திக் கொண்டு தெரியும். அழகுகள் என்பது அடங்கிக் கிடக்கும். இது அழகுகளாக அடங்கி கிடப்பதை நான் பார்க்கிறேன். துருத்திக் கொண்டு தெரிகிற திட்டுகளாக, இவை எதுவுமே தெரியவில்லை. அந்தச் சமயத்திலேதான் ஞானசம்பந்தர் போன்ற பெரியவர்களே, கசப்புணர்வு பொங்க இவர்களைப் பற்றிகூறியிருக்கிறார்கள் என்கின்ற போது அது கொடிய தாக்குதல்களுக்கு மத்தியிலே நடந்த அவர்களுடைய தமிழ்ப்பணி, என்னுடைய நெஞ்சத்தைக் கவருகிறது.

சீவக சிந்தாமணியிலே, அந்தக் கவிதையினுடைய சிறப்புக்கள், அந்தக் கவிதைகளுடைய பெருமைகள் எல்லாம் மிகவும் அற்புதமாகப் போற்றிப் பாராட்டத்தக்கன.

"மெய்ப்பொருள்காட்டி உயிர்களுக்கு அரனாகிய, துக்கம் கெடுப்பது நூல்" என்று சொல்லுகிறார்கள்.

இதுதான் சமண இலக்கியங்களுடைய பொதுவான நோக்கமாக இருக்கிறது.