பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- -

90 சமயந்தொறும் நின்ற தையலாள்

அதைவிடச் சற்று மேலும் சென்று, படமாடும் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடும் கோயில் நம்பர்க்கு அது ஆகா என எதிர்மறை வடிவிலும் அமைத்துக் காட்டினார். எனவே, மக்களைக் கோயிலாக்கி, மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு எனவும் எடுத்துக்காட்டிய கொள்கையைத் தன்னுட் கொண்டு விளங்குவதே சைவ சித்தாந்தப் பெருநெறி.

சாத்திரம் பேசுவதாலும், இறைவனைப் போய்ப் பல்கால் வேண்டுவதாலும் பயனில்லை என்று இடித்துக் கூறி, இரப்பவர்க்கு ஈபவர் மேலேயே இறைவன் வந்து அருள் செய்வான் என்று தத்துவம் கூறி மக்களை நோக்கிப் பணியாற்ற வைத்த கொள்கையே சைவ சித்தாந்தம்.

"சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்

கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்”

என்று கூறி, இரப்பவர்களையே பாத்திரமாகக் கொண்டு அவர்களுக்கு இடும் சோறுதான் உங்களை வாழ்விக்கும் என்று கூறி, சமுதாயத் தொண்டினை வலியுறுத்திப் பேசிய அப்பரடிகள் வாழ்வியலை உள்ளீடாகக் கொண்டதே சைவ சித்தாந்தம்.

'இரப்பவர்க்கு ஈயவைத்தார்

ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட்கு எல்லாம்

கடுநரகங்கள் வைத்தார்'

என்று இக்கருத்தை வெளிப்படுத்தினார் அப்பரடிகள்.