பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலக்கியத்தில் சமூகப் பணி

அண்மையில், 'கலைமகள்' இதழில் இடம் கண்டு, இடம் காட்டிய 'நாவல் பிறந்த கதை எனும் தொடர்ச்சித்திரத்தில் தான் என்னுடைய சமுதாயம் ஒரு சைபைஜார் என்னும் இந்த நாவலை எடுத்துக் கொண்டு எழுதியபோது, என் சிந்தனைகள் இவ்வாறு ஓடின.

நாவல் என்றால் என்ன?
சமூகத்தின் ஆன்மாதான் நாவல்.
சமூகம் என்பது எது?
நானும் நீங்களும் சேர்ந்தது சமுகந்தான். நம்மோடு மற்றவர்களும் சேர்த்து.
சமுதாயத்தை மனிதர்கள் உருவாக்குகிறார்கள்.
மனிதர்களைச் சமுதாயம் உருவாக்குகிறது.

சமூகமும் சமூகத்தின் மனிதர்களும் இவ்வாறு ஒன்றில் ஒன்றாகப் பின்னி, ஒன்றுக்கு ஒன்றாகி ஆதாரமாகி, பிணைந்தும் பிணைக்கப்பட்டும், இணைந்தும் இணைக்கப்பட்டும் உயிரும் உயிர்ப்புமாக நிலவுகிற இந்த ஒட்டுறவு, சமூகத்தின் விதியாக மட்டுமில்லாமல், சமூகத்தின் மனிதர்களின் விதியாகவும் விளங்கும். இவ்விதியை நியதி என்றும் வரம்பறுக்கலாம்; யதார்த்த உண்மையும் இதுவேதான். ஆனல், இந்த உண்மைதான்-இவ்வுண்மையின் நிலைமைதான் சமூகத்துக்கு-சமூகத்தின் மனிதர்களுக்கு வாய்த்திட்ட விதியா? விதிமுறையா?.

சிந்தனைக்கு விருந்து படைக்கும் வினா இது.
ஆனால், வினாவுக்கு விடை என்ன?

அந்த விடை என்னிடம் மாத்திரமல்ல; உங்களிடமும் தான் இருக்கிறது. ஏன், சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனிடமும் அந்த விடை இருக்கிறது. எனவே, அவ்விடையை நாம் அந்தரங்க சுத்தியோடு எண்ணிப் பார்த்துத் திருவாய் மலர்ந்தருள வேண்டாமா? அது நம் கடமை அல்லவா? .

சைபைஜார் 'ஒய்யாரக் கொண்டை'யாக அழகு காட்டித் தொலையட்டும். உள்ளே இருக்கும் ஈரும் பேனும் பற்றி நமக்கு அக்கறை இல்லை. அந்த அக்கறை இந்த நிலா உலா நாகரிகத்தின் தலையிலே விழுந்து தொலையட்டும்.

ஆனால், சமுதாயம் அவ்வாறு வெறும் 'ஒய்யாரக் கொண்டை’யாக விளங்கலாமா? அப்படிப் போலித்தனமாகபொய் வேடம் புனைந்து திகழச் செய்யலாமா? அங்ஙனம் திகழும் பட்சத்தில், அது சமுதாயத்தின் குற்றமாகுமா?