பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

எய்தவன் இருக்க, அம்பை நோவது தர்மமாகுமா? பண்பு ஆகுமா? விதியாகுமா? அப்படியென்றால், சமூகத்துக்கு உருக்கொடுத்து, காவல் செய்யக் கடன்பட்ட இலக்கியம், கலாசாரம், அரசியல், பாரம்பர்ய மரபு, பொருளாதாரம், பண்பாடு போன்ற வாழ்வியலின் பலவேறு நிலைப்பட்ட பல வேறு அரங்குகளினின்றும் 'ஏ, தாழ்ந்த சமுதாயமே!’ என்று பேசும் நிலையும், சமுதாய விரோதிகளின் பட்டியலும் இன்னமும் நீண்டு கொண்டேதான் போகவேண்டுமா? சமூகத்தைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திவிட்டு, குற்றவாளிகளே நீதிபதிகளாக ஆகிற துர்ப்பாக்கியமான ஓர் அநீதியை இனியும் அனுமதிப்பது தருமமாகுமா?

கசக்கின்ற இக் கேள்விகளுக்கு விடை காண வேண்டிய பொறுப்பு எனக்கு மாத்திரம் அல்லவே?

சிறுகதை மன்னன் அதிவீரராம பாண்டியன், அழகுப் பாரிஜாதம் குமாரி பரிமளம், காந்திபக்தர் வீரபாகு, கோயில் குருக்கள் புண்ணியகோடி!-சமுதாயம் என்பது இந்த நாலு போதாமா?-யார் சொன்னது?

“ட்ரெடில் வருகிறது; இலக்கியத் திருட்டும் வருகிறது; காதல் வருகிறது; மஞ்சள் பத்திரிகை"யும் வருகிறது. வாழ்க்கை வருகிறது; விதியும் வருகிறது; கேள்வி வருகிறது: சிந்தனையும் வருகிறது!

இந் நவீனத்தை வேண்டிப் பெற்று, தொடரும் கதை யாக ‘மணிக்கொடி”யில் வெளிப்படுத்தியபோது, இதில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே’ என்ற அபாய அறிவிப்பு செய்யப்பட்டிருந்துங்கூட, இக்கதை தொடர்ந்த போதும் சரி, தொடர்ந்து நிறைந்த போதும் சரி, இதை படித்தவர்களும், படித்ததைக் கேட்டவர்களும் நம்மைத் தான் சந்தியில் நிறுத்தியிருக்கிறேனே?’ என்று மனிதப் பண்பு கொண்டு, சுயதரிசனப் பான்மையுடன் சத்தியச் சோதனை’ தடத்திக் கொண்ட ஒர் அதிசயத்தையும் நான் கேள்வியுற்றேன்.

ஆகவே: என்னுடைய இந்த நவீனம் அதற்கு என்னால் விதிக்கப் பெற்ற சமுதாயப் பணியினை மனச்சான்று ஒளிகாட்ட-ஒலி காட்ட முடித்துக் காட்டியிருப்பதாகவே நான் கொள்ளலாம் அல்லவா?

பூவை ஆறுமுகம்

சென்னை-1.
25-3-72