பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 21



ஜெயகாந்தனின் “நான் இருக்கிறேன்” என்ற சிறுகதையில் சில வரிகள் இந்த உணர்வுகளை நமக்கு ஊட்டுகின்றன.

“காலு இல்லாட்டிப் போனா என்னாய்யா! கையாலே இந்த உலகத்தையே வளைக்கலாமே! வாழறதுக்குக் காலும் கையும் வேணாமய்யா, நல்ல மனசு வேணும் அறிவு வேணும்! மனுசனோட அறிவு யானையைக் காட்டிலும், சிங்கத்தைக் காட்டிலும் வலுவானது. இல்லேங்கறதுக்காகச் செத்து இருந்தா மனுச சாதியே பூண்டத்துப் போயிருக்கும். காலு இல்லாட்டி அது இல்லாத கொறையை மாத்திக்கிட்டு எப்படி இருக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்னா காலு இருக்கிறவங்களைக் காட்டிலும் நீ வேகமா ஓடிட மாட்டியா?” என்று வியாதிக்காரன் மூலம் நொண்டியை ஊக்கப்படுத்தும் ஜெயகாந்தனின் அறிவுரை கொள்ளத்தக்கது.

ஆம்! உடலில் ஊனம் என்பது வாழ்க்கையை கெடுக்கக் கூடியதன்று ஆனால், உடலில் ஊனம் என்ற நினைப்பு இருக்கிறதே, அது ஆளை அரித்து கொன்று விடும் உடல் ஊனங்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இன்பமாக அமையும். மீண்டும் ஜெயகாந்தனின் “நான் இருக்கிறேன்” என்ற சிறுகதையின் வரிகளைக் கேளுங்கள்.

“இந்தாய்யா, நீ சாகப்படாது...... சொல்லிட்டேன். ஒனக்குக் காலு இல்லேங்கிற நெனப்பினாலேதான் நீ கஷ்டப்படறே. மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறே!” என்பவை அந்த வரிகள்!

மனித உலகம் சிந்திக்கத் தொடங்கிய காலந்தொட்டு உழைப்பு, உழைப்பின் உயர்வு பற்றி ஆயிரம் பேசப் பட்டுள்ளது. “உழைத்தால் உயரலாம்” என்று பல்லவி,