பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இன்று கோயில்களில் கூடி காசுகளின் ஆதிக்கம்: மேலும் களவு நடைபெறும் இடங்களாகவும் கோயில்கள் ஆகிவிட்டன. அன்னை பராசக்தி, அருள்புரிய எழுந் தருளியுள்ளாள். ஏழை எளியவர்கள் படும் பாட்டைக் காண முடியாமல் அவளுக்குச் சாத்தும் வெள்ளிக் கண் மலர்கள் அவள் கண்களை மறைக்கின்றன.

மக்கள் அழுது அரற்றும் மொழியை அவள் கேட்க முடியாமல் மணியோசை ஒலித்துத் தடுக்கிறது. இல்லங்கள் தோறும் அவள் எழுந்தருளி, தம்மைத் தொழும் மக்களுக்கு இன்ப நலம் வழங்கலாம் என்று எண்ணினால், அதுவும் இயலாத நிலையில் பூசாரி பூட்டைப் போட்டு பூட்டி விடுகிறான்.

மானுடத்தை வாழ்விக்கும் மிக உயர்ந்த கடவும் கொள்கை தகாதார் வயப்பட்டுக் கெட்ட கேட்டினைப் பாருங்கள்! இதனைப் பட்டுக்கோட்டை,

      
        “காசு தந்தால்தான் உன்னைக்
        காணும் வழி காட்டுவதாய்
        கதவு போட்டு பூட்டு வைத்துக்
        கட்டாயம் பண்ணுவதைப் பார்த்தாயா?”
                                      (பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 23.)

என்று சாடுவதை எண்ணுங்கள்.

நமது சமுதாயத்தில் ஒரு காலத்தில் கடவுளும் கடவுளின் திருக்கோயில்களும் அதாவது, ஆலயங்களும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன. சமுதாயத் தின் மையமாகவே ஆலயங்கள் விளங்கின. குடிகளுக்கு நலம் செய்யும் மையங்களாக ஆலயங்கள் விளங்கின.