பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 53

பாரதத்தில் ஒரு நவசக்தி தோன்றியிருக்கிறது என்பது பாரதியின் கருத்து. அந்நிய ஆட்சியை, கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடும் போராட்டத்தை கம்சன், காளிங்கன் ஆகியோருடன் கண்ணன் நடத்திய போராட்டத்துடன் ஒப்புமைப் படுத்துகிறான்.

“கண்ணன் சுயநலம் கருதி ஒரு காரியமும் செய்யவில்லை. கொடுங்கோலர்களுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே குறிக்கோள்! அதுவும் கம்சன், காளிங்கன் திருந்துவதற்குப் போதிய காலம் கொடுத்தும் திருந்தாத நிலையிலேயே கொடுங்கோலர் களை அழிக்க வேண்டியதாயிற்று” என்று பாரதி விளக்கி எழுதுவது அறிவறிந்த விவாதம்!

இந்தியாவில் மக்களாட்சி வேண்டும். இது பாரதியின் குறிக்கோள்! ஆனால், ஆதிக்க அரசோ, மக்களின் விருப்பார்வங்களைப் புரிந்து கொண்டு ஆட்சியை ஒப்படைப்பதற்குப் பதில் பல துன்பங்களையே செய்து வருகிறது என்று பாரதி வருந்துகிறான்.

பல புதிய அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து, பாரத சுதந்திரப் போர் வீரர்களைச் சிறையில் பிடித்து வைக்கின்றனர். ஆயினும், பாரதப் புதல்வர்கள் பயப்படாமல் தைரியமாகத் துன்பத்தை ஏற்று அனுபவித்து வருகிறார்கள்.

சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளைத் துன்புறுத்துவதும் காலப் போக்கில் கதிரவனை நோக்கி வீசிய கல், வீசியவர் தலையில் வீழ்வது போல் ஆள்வோருக்கே துன்பமாக முடியும் என்று பாரதி எச்சரிக்கை செய்கிறான்.