பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

சமுத்திரக் கதைகள்


தடுக்கறதுக்கு ஒரு நாதிகூட இல்லியா? என்று வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே ஓடிவந்தாள். அவள் தலையில், எண்ணைக்குப் பதிலாக எள்ளுகளே வியாபித்திருந்தன. லேசாய் கூன்போட்ட உடம்பு... எலும்புகள் மரச்சட்டங்கள் போல் தோற்றம் காட்டின. தனது தலையில் மாறி மாறி அடித்தபடியே, பன்னீரை அவள் கட்டிப்பிடித்தாள். உடனே பன்னீர் சிறிது நேரம் தாயையும் சேர்த்துப் பிடித்து ஆடினான். அப்புறம், அம்மாவின் தோளில் முகம்போட்டு அவள் உடல் வழியாய் தரையில் சரிந்தான். அந்த மூதாட்டி சாபம் போட்டாள்.

‘எந்த நாயி என் மவன் கட்ட அவுத்தது? அவங்க வீட்டுலயும் ஒருத்தர் இவனை மாதிரி ஆகாட்டா, நான் ஒருத்தனுக்கு முந்தானை...” அரசுக் குழுத் தலைவர் உக்கம்சிங், இந்த மண்வாசனைத் தமிழ் புரியாமல் குழம்பியபோது, மனித உரிமை மகேந்திரன், பன்னீரை உற்றுப் பார்த்தார். பிறகு பன்னீரின் உச்சியையும், அந்த அம்மாவையும் மாறிமாறிப் பார்த்தபடியே, கேள்வி மேல் கேள்வியாய் கேட்டார்.

“பெரியம்மா! ஒங்க மகன் உச்சில வெள்ளையா பள்ளமா மூன்று அங்குல ஆழத்துல, கிண்ணம் மாதிரி பள்ளமாய் இருக்குதே... அது எப்படி வந்தது? ஏன்னா, அது மூளைய பாதிச்சிருக்கும். இல்லியா டாக்டர்...?”

டாக்டர். ராம்விவேக், தனது களப்பணியை மனித உரிமை பறித்துக்கொள்வதாக நினைத்து, முகம் சுழித்தபோது, மகனோடு கீழே சரிந்துகிடந்த அந்த மூதாட்டி, அண்ணாந்து பார்த்து அவர்களுக்கு சேதி சொல்லப் போனாள்.

“அதை ஏன் கேக்கப்பா? போன பிள்ளையார் சதுர்த்தியில...”

அந்த மூதாட்டியை நோக்கி முகம் போட்டு உன்னிப்பாகக் கேட்கப்போன குழுவினரை, ஒரு காரசாரமான குரல் திரும்ப வைத்தது.

“யோவ்... உங்களுக்கு பொம்பளகிட்ட என்னையா பேச்சு? எது கேட்கணுமுன்னாலும் என்கிட்ட கேளுங்க."