பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகம் தெரியா மனுசி

3


ஊட்டுப்புரை எனப்படும் சத்திரங்களுக்கு விறகு வெட்டிக் கொடுக்க வேண்டும். குடியான்கள், வண்டி வாகனங்களையும், உழவு மாடுகளையும் அதிகார கச்சேரியில் ஒப்படைக்க வேண்டும்.

இப்படி இளப்ப சாதிகளுக்காக விதிக்கப்பட்ட 120 ஊழியங்களில் பாதியையாவது மகாராஜாவின் வருகையின்போது செய்தாக வேண்டும். இல்லையென்றால் சிரச்சேதம்தான். ஆனாலும் இவர்களுக்கு கூலி கிடையாது. கூலி கிடக்கட்டும். குடிப்பதற்கு கூழ் கூட கிடைக்காது. ஊட்டுப் புரைகளில் வீசியெறியப்படுகிற எச்சில் சோறு கூட கிட்டாது. காரணம், அந்தப்பக்கம் இவர்கள் போகமுடியாது. ஆனாலும், ஊழியம் செய்ய சுணங்கினால் சவுக்கடி... வரிகட்ட தாமதித்தால் குனித்து வைக்கப்பட்டு முதுகுமேல் கல்லேற்றப்படும். இந்த ஊழியத்திலிருந்து நோயாளிகளும், வயோதிகர்களும் கூட தப்பிக்க முடியாது.

எனவே, தோள்வரை தொங்கிய செவ்வக வடிவமான காதுகளில், மாட்டப்பட்ட ஈயக்குண்டலங்களோடும், முட்டிக்கால்களுக்கு கீழே போகாத முண்டுகளோடும், பிடரியை மறைக்கும் குடுமிகளோடும் தோன்றிய ஆடவர்கள், சொல்லாமல் கொள்ளாமல் ஓடினார்கள். “சுடலமாடா காப்பாத்து, கள்ளிமாடா காப்பாத்து” என்று அலறியடித்து ஓடினார்கள். மனைவி, மக்கள் இல்லாதவர்கள் ஒளிந்து கொள்ளவும், குடும்பஸ்தர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொள்வதற்காகவும் ஒடிக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஓட்டத்தினால் அந்த பனையோலை குடிசைப்பகுதி, காலடி தமுக்காக ஒலமிட்டபோது

அந்தத் தெருவில் ஆங்காங்கே பேசிக்கொண்டும், திருவுரலில் கேழ்வரகு அரைத்துக் கொண்டும், உரலில் சோளத்தை உலக்கையால் இடித்துக் கொண்டும், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே வேலையாற்றிய பெண்கள், பணிக்கருவிகளை கைவிட்டு விட்டு, ஒன்று திரண்டார்கள். இந்தப் பெண்களின் இடுப்புக்கு கீழே, முழங்கால்களுக்கு சிறிது இரக்கமாய் ஒற்றைச் முண்டுகள்... இடுப்புக்கு மேலேயோ முழு நிர்வாணம்.

ச 2