பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதிர் கன்னி

43


எளிமையான அம்மா, இப்படி, காட்டுமிராண்டித் தனமாய் கத்துவதைப் பார்த்ததும், கீதா, அவளை புதிராய் பார்த்தாள். தாய்க்காரி மீண்டும் கத்தினாள்.

“அந்தப் பயல் என்னடி சொன்னான்? என்ன இழவச் சொன்னான்? சொல்லுடி...”

“எவரையும் நாகரீகக் குறைவாய் பேசாதம்மா. அதுலயும் மனோகரன் பத்தரை மாத்துத் தங்கம். சே... பாதி சந்தோஷத்தை கெடுத்திட்டியே...”

“அவள் கிடக்காள். நீ சொல்லம்மா...”

ஆனாலும், அருணாசலத்திற்கு, மனைவி , கேட்பதன் பொருள் புரிந்தது. அதனால் அவரது கம்பீரமான குரல், லேசாய் நடுங்கத்தான் செய்தது. பெற்றெடுத்த மகளையே, தன்னைப் பிறப்பித்த தாயாக்கி, அவளைக் கெஞ்சாக் குறையாய் பார்த்தார். பல திரைப்படக் காட்சிகள், மனத்திரையில் ஒலியும் ஒளியுமாய், அவர் குரலை நடுங்க வைத்து, மனதை பாதி இருளில் மூழ்க வைத்தது.

கீதா விளக்கினாள்.

“எங்க கம்பெனிக்கும், லண்டனில் உள்ள ஒரு சர்வதேச கம்பெனிக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதை, ஏற்கெனவே உங்ககிட்ட சொல்லி இருக்கேன். ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் கருமுட்டையிலயும், விந்திலும் இருக்கக்கூடிய நாற்பத்தாறு குரோமோசோம்களில், நாலு கோடியே பத்து லட்சம் கேரக்டர்கள், அதாவது இயல்புகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கு. இந்த குரோமோசோம்களைப் பிளந்து, உயிர் என்பது என்ன? அதுவும், ஆன்மாவும் ஒன்றா? என்று கண்டறியும் ஆராய்ச்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கு.”

கீதா, தான் சொல்வது பெற்றோருக்கு புரிகிறதா என்பதுபோல், பேச்சுக்கு தாற்காலிக இடைவெளி கொடுத்து அவர்களை ஆசிரியதனமாகப் பார்த்தாள். அவர்களுக்கு புரிகிறது என்று அனுமானித்து, அதே குரல் வேகத்தில் பேசினாள்.