பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலம்

65


அமைச்சர், தாம்பளத் தட்டில், மஞ்சள் அரிசி, மங்கலத் தேங்காய், வெற்றிலைப் பாக்கு வகையறாக்களுக்கு மத்தியில் இருந்த மஞ்சள் சரடை எடுத்தார். பின்னர் பின் யோசனை செய்தவர் போல், இளங்கோ - மேரி தம்பதியை கட்டாயமாக வரவழைத்து, அவர்களது கரங்களில் தாலி சரட்டை திணித்து, இருவரையும் சேர்ந்தாற் போல் மணமகன் ராமுவிடம் கொடுக்கச் செய்தார். மேளங்கள் முழங்கின. கை தட்டுகள் வெடி வேட்டுகள் போல் ஒலித்தன. மணமக்களின் பெயர்களைச் சொல்லி ஒரு வாழ்க என்றால், இளங்கோலுர்து தம்பதிக்கு பல வாழ்க...

திருமணம் முடிந்ததும், விருந்துக்கு நேரமில்லை என்று உடனடியாய் புறப்பட்ட அமைச்சரையும், எஸ்.பியையும் வழியனுப்பி வைப்பதற்காக, மேரியும் இளங்கோவும் வாசல் வரை வந்தார்கள். வரும்போது வரவேற்க முடியாமல் போனவர்களை, போகும் போதாவது வழியனுப்பி வைப்பதே நயத்தகு நாகரீகம் என்று கருதி அவர்களது வாகனங்கள் கண்மறைவது வரைக்கும் வாசல் வெளிப்பக்கமே காத்து நின்றார்கள். திரும்பி நடக்க போனால், வாசல் பக்கம் இரண்டு பேர்... ஒன்று பழைய முகம்... இன்னொன்று பார்த்தது போன்ற முகம்.

பழைய முகக்காரிக்கு, லூர்துமேரியை விட ஒரு வயது அதிகமாக இருக்கும். அதிகமாக படிக்காத அசல் மண் வாசனை அவள் முகத்தில் துளிகளாகவும் தலையில் தூசி துப்படாக்களாகவும் வெளிப்பட்டன. அவள் முகம் பழுத்துப் போய் இருந்தது. கைகால்கள், சதைக்குச்சிகளாகத் தோற்றம் காட்ட, கண்கள் குழிகளாய், தொண்டை, எலும்பு வளைவாய், நல்லதொரு காட்சிக்கு, எதிர்க் காட்சியாய் நின்றாள். நவீன ராமன் விட்டுப்போன கிராமத்து வனவாசக்காரி. அவள் அருகே நிற்கும் சிறுவன், வேர் ஆடும் செடிபோல் குழைந்து நின்றான். ஒழுங்கற்றுப் போன வலது கால்... இடையில் இருந்து நழுவி கைகளால் பிடித்து நிறுத்தப்படும் அழுக்கு டவுசர். கோராதி கோரம்... உடம்பு எங்கும் சிரங்குத் தடயங்கள்... நேருக்கு நேர் பார்க்காமல் கவிழ்ந்தும், அண்ணாந்தும் பார்க்கும் வறண்டு போன கண்கள்...