பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 181

என்று பேசுவார். பிறகு விசாரித்தால் சம்பந்தப்பட்ட அவர்கள் சரியான பெருச்சாளிகள் என்பது தெரியவரும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், பெருந்தலைவரைப் போலவே சிலர் பேசி கெட்டபெயர் வாங்கிக் கொண்டதுண்டு. காரணம், தொண்டர்கள் பெரியவர் ஒருவருக்குத்தான் அப்படிப் பேச உரிமை கொடுத்திருந்தார்கள். எனக்குப் பெருந்தலைவரிடம் பல தடவை பேச வாய்ப்புக் கிட்டியும், என்னால் பேச இயலவில்லை.

சித்தப்பாவின் அப்பாவித்தனம்

ஒரு தடவை, சென்னையில் வண்ணைப்பகுதியில், என் சித்தப்பா வீட்டில் அவருக்கும் எனக்கும் ஒரு விவாதம். அவர்தான் என்னைப் படிக்க வைத்தார். பேச்சு வாக்கில், “ஆனானப்பட்ட காமராசரே உன்னை வரும்படி ஆள் அனுப்பினார். உன் படிப்பைக் கெடுக்க நானா சம்மதிப்பேன். சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பிவிட்டேன் என்று கூறினார். அந்த காமராசர மாதிரி பெண்டாட்டி-பிள்ளை இல்லாம உன்னை அலையவிடுவேனா? நான் யாராக்கும்? என்றார் பாமரத்தனமாக, அதில் அப்பாவித்தனமான பாசம் ஒலித்தது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எனது அப்பாவி சித்தப்பா, நான், காமராசருக்குத் துணையாகி அரசியலில் சேர்ந்தால் என் படிப்புக் கெட்டுவிடும் என்றும், பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுவேன் என்றும் மனப்பூர்வமாக நம்பியிருக்கிறார். அதற்குப்பிறகு பெருந்தலைவரை சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறும் துணிச்சல் எனக்கு இல்லை.

கேள்வியும்-காட்டமான பதிலும்

கல்லூரிப்படிப்பு முடிந்தபிறகு, சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்தது. அப்போது டெப்டிக் கலெக்டர் தேர்வுக்கு நான் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று வேலையில் சேர்ந்த பத்து நாள்களுக்குள், ஈக்குவார்பாளையம் என்ற இடத்திற்கு என்னை மாற்றிவிட்டார்கள்.

இந்த மாற்றம், என் தேர்வை கெடுக்கக்கூடியது. அதோடு மாவட்ட உயர் அதிகாரி ஒருவரின் மகனுடைய வசதிக்காக, என்னை மாற்றியது எனக்கு அதிகப்படியாகத் தெரிந்தது. ஆகையால், நான் ஆவேசத்துடன் காமராசரின் இல்லத்திற்கு நேராகச் சென்றேன். அவரும் என்னை அடையாளம் கண்டவர்போல் தலையாட்டினார். எங்களுக்கிடையே இப்படிப் பட்ட பேச்சு நடந்தது.